search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலங்கை மக்களுக்கு உதவிகள் கிடைத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    (கோப்பு படம்)

    இலங்கை மக்களுக்கு உதவிகள் கிடைத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • இலங்கை மக்களுக்கு, 40,000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • கப்பல் போக்குவரத்து செலவு உட்பட 196.83 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது.

    இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து 3-ம் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு வி.டி.சி. சன் கப்பல் சென்றது.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித்தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். இதற்கான அனுமதிகளை மத்திய அரசிடம் கோரி பெற்றார்.

    இதன் அடிப்படையில் இலங்கையில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதை கருத்தில் கொண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

    இப்பணிக்காக ரூபாய் 177 கோடியை ஒதுக்கீடு செய்து உத்திரவிட்டார். மேலும், இத்தகைய பெரும் மனிதாபிமானப் பணியில் தமிழக மக்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கை மக்களுக்கான நிவாரண பணிக்கு தேவையான நன்கொடைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் மனமுவந்து நிதி அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

    முதலமைச்சர் அறிவிப்பின் அடிப்படையில் இப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான பணி உடனடியாக தொடங்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை மக்கள் பயன்படுத்த கூடிய அரிசி வகைகளும் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள 85 அரிசி ஆலைகளிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டது.

    மேலும் பால் பவுடர், ஆவின் நிறுவனத்திடம் இருந்தும், மருந்துப் பொருட்கள், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலமாகவும் கொள்முதல் செய்யப்பட்டன. இப்பணிகள் அனைத்தும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு, 9075 மெட்ரிக் டன் பொருட்கள் அடங்கிய முதல் கப்பலை 18.05.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் , சென்னை துறைமுகத்தில் இருந்து, இலங்கைக்கு TAN BINH 99 என்ற கப்பலில் அனுப்பி வைத்தார்.

    இதில் சிறப்பு நிகழ்வாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மாதிரி தொகுப்பு இலங்கை துணை தூதரிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 22.06.2022 அன்று 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இரண்டாவது கப்பலை (VTC SUN) தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள்.

    அடுத்த கட்டமாக நேற்று (23.07.2022) 16,595 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மூன்றாவது கப்பலை (VTC SUN) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சர்களும் அனுப்பி வைத்துள்ளார்கள்.

    இவ்வாறு மூன்று கப்பல்களில் இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தவாறு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 102 மெட்ரிக் டன் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் இலங்கை மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இதற்காக கப்பல் போக்குவரத்து செலவு உட்பட 196.83 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது. இத்தொகையில் 8.22 கோடி ரூபாய், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்த பங்களிப்புகள் மூலமாகவும் எஞ்சியுள்ள 188.61 கோடி ரூபாய் தமிழக அரசின் சொந்த நிதியில் இருந்தும் செலவிடப்பட்டுள்ளது.

    அனைவரும் பாராட்டியுள்ள இந்த நடவடிக்கையால் இலங்கையில் பொது மக்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் சூழலை, தொடர்ந்து கண்காணித்து அந்த மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைத்திட அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பிறர் துயர் கண்டு மனம் நோகும் வலிதான் அன்பு, வெறுப்புணர்வை வெறுக்கும் அறமே மனிதநேயம், அண்டை நாட்டு மக்கள் அல்லலுறும் சூழலில் அன்பும் மனிதநேயமும் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் ஈந்த உதவிப் பொருட்களைச் சுமந்து மூன்றாவது கப்பல் இலங்கை புறப்பட்டது. தமிழ்வழி நின்று துன்பம் துடைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×