என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருதுநகர்: கல்லூரி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை
- விருதுநகரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இதுகுறித்து மாரனேரி, பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பச்சேரி பகுதியை சேர்ந்தவர் மருது பாண்டியன். இவரது மகள் பிரியதர்ஷினி(18). திருச்சுழியில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பாராம். இதனை அடிக்கடி தாய் கண்டித்துள்ளார்.
நேற்று காலையில் கல்லூரிக்கு செல்லும்போது செல்போனை பார்த்தபடி பிரியதர்ஷினி சென்றுள்ளார். இதனால் தாய் அவரை திட்டியுள்ளார். இந்த மாலை வீடு திரும்பிய பிரியதர்ஷினி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரிபேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஆலங்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் தேவராஜ்(58) இவரது மனைவி செல்வி (52). இவர்களுக்கு காவியா என்ற மகளும், தங்கேசுவரன் என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. காவியா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.
வீட்டின் கீழ் பகுதியில் தேவராஜூம், மாடியில் தங்கேசுவரன் தனது மனைவி சங்கீதாவுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காவியாவை கணவர் வீட்டுக்கு அனுப்புமாறு செல்வியிடம் சங்கீதா வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வி அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
அதை பார்த்த காவியா அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் சத்யசாய் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(50). இவர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜ்குமாரின் மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






