search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வாலிபரிடம் ரூ.15லட்சம் மோசடி
    X

    வாலிபரிடம் ரூ.15லட்சம் மோசடி

    • வாலிபரிடம் ரூ.15லட்சம் மோசடி செய்த அருப்புக்கோட்டை நகராட்சி பெண் ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • ரகுராம் அருப்புக்கோட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை குழந்தை வேல்புரம் முதல் தெரு வெள்ளைக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ரகுராம். இவர் சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    ரகுராமின் மாமியார் உத்தரகுமாரியும், அருப்புக்கோட்டை நகராட்சியில் ஊழியராக பணிபுரியும் லட்சுமிதேவி என்பவரும் ஏற்கனவே தனியார் நூற்பாலையில் வேலை பார்த்துள்ளனர்.

    இந்த நிலையில் ரகுராம் அரசு வேலைக்கு முயற்சி செய்வதை தெரிந்து கொண்ட லட்சுமிதேவி உத்திரகுமாரியிடம், உங்கள் மருமகனுக்கு எனக்கு தெரிந்தவர்கள் மூலம் சென்னை தலைமை செய லகத்தில் வேலை வாங்கித் தருகிறேன். அதற்கு பணம் செலவாகும் என்று கூறி உள்ளார். அதை உத்திர குமாரி நம்பியதை தொடர்ந்து அவருக்கு நெல்லையை சேர்ந்த வெள்ளத்துரையை லட்சுமி தேவி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    வெள்ளைத்துரை நாகர்கோவிலுக்கு ரகு ராமை அழைத்துச் சென்று டேனியல் என்பவரிடம் இவர் நமது புரோக்கர் லட்சுமிதேவிக்கு மிகவும் வேண்டியவர் என்று தெரிவித்து அவரிடம் பணம் கொடுத்தால் வேலை வாங்கி கொடுப்பார் என கூறி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து டேனியல் ரகுராமுக்கும், அவரது தம்பிக்கும் வேலை வாங்கி கொடுக்கிறேன் என தெரிவித்து ரூ.15 லட்சம் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து டேனியல் வங்கி கணக்கில் ரகுராம் ரூ.7 லட்சம் செலுத்தி உள்ளார். மேலும் நகையை அடகு வைத்து ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் சொன்னப் படி வேலை வாங்கி கொடுக்க வில்லை. இதைத்தொடர்ந்து ரகுராம், டேனியல் அலுவலகத்துக்கு சென்று தான் அனுப்பிய பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். அப்போது டேனியல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    டேனியல் ரகுராமிடம் 2 காசோலைகளை கொடுத்துள்ளார். அதனை வாங்கியில் போட்டபோது அதில் பணம் இல்லை என்று திரும்பிவந்துவிட்டது. இதுதொடர்பாக ரகுராம் அருப்புக்கோட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தர விட்டார். அதன்பேரில் டேனியல், வெள்ளைத்துரை, லட்சுமி தேவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×