search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் நாற்று நட்டு கிராமமக்கள் போராட்டம்
    X

    சாலையில் தேங்கிய மழைநீரில் நாற்றுநட்ட கிராமமக்கள்.

    சாலையில் நாற்று நட்டு கிராமமக்கள் போராட்டம்

    • சாலையில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
    • தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், மணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லியடிக்காடு கிராமம், காளியம்மன் கோயில் தெருவில், சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    200 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வெள்ள நீர் வடிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்ட நிலையில், சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது.

    சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கண்டு கொள்ளாமல் அப்படியே விடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சிறிது தூரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் தண்ணீரில் இறங்கி நடந்து செல்லும் அவலம் உள்ளது.

    மேலும், தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் குழந்தைகளுடன் உறங்க முடியாத சூழல் உள்ளது.

    தண்ணீர் தேங்கி நிற்பதால் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசமடைந்த இப்பகுதி பொதுமக்கள், சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வீ.கருப்பையா தலைமை வகித்தனர்.

    சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர், சீனிவாசன், முத்துக்குமார், பன்னீர் செல்வம், பாக்கியம், அஞ்சம்மாள், ராஜ்குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×