என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்தடையை கண்டித்து நள்ளிரவு வரை கிராம மக்கள் மறியல்- குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுவதாக குற்றச்சாட்டு
- ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் பேசினர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள மேலானூர் ஊராட்சியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு கீழானூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வந்தது. ஆனால், காக்களூரில் ஏற்பட்ட மின்தடையால் மேலானூர் பகுதிக்கு வந்த மின்சாரம் நிறுத்தப்பட்டு காக்களூர் தொழிற்பேட்டைக்கு மாற்றிவிடப்பட்டதாக தெரிகிறது.
இதனால் மேலானூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இரவு நேர மின்தடையால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.
இதனால் கிராம மக்களின் மறியல் போராட்டம் நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்தது. இதையடுத்து வெங்கல் போலீசார் கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறுதி அளித்தால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார். இதனால் போலீசார் மின்வாரிய அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் பேசினர். மின் சப்ளை செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும் பழைய வழிதடத்திலேயே மின் சப்ளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கிராமமக்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணவகுத்து நின்றன.
இதற்கிடையே இன்று காலை 10 மணிவரை அப்பகுதியில் மின் சப்ளை செய்யப்படவில்லை என்று கிராமமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.






