என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊதிய உயர்வு கோரி போராட்டம் - தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த எம்.பி. விஜய் வசந்த்
    X

    தொழிலாளர்களை சந்தித்த எம்.பி. விஜய் வசந்த்

    ஊதிய உயர்வு கோரி போராட்டம் - தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த எம்.பி. விஜய் வசந்த்

    • கீரிப்பாறையில் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொழிலாளர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    கன்னியாகுமரி:

    கீரிப்பாறையில் செயல்படும் அரசு ரப்பர் தோட்டத்தில் காளிகேசம், பரளியாறு, மணலோடை ஆகிய 4 பிரிவுகளிலும் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்களுக்கான ஊதிய உயர்வு என்பது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காததால், கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன் தோட்டக்கலை தொழிலாளர்கள் கடந்த 7-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நியாயமான கோரிக்கைக்காக தொழிலாளர்கள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தோட்டக்கலை தொழிலாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது பேசிய விஜய் வசந்த் எம்.பி., உறுதி செய்யப்பட ஊதிய உயர்வு தற்போது வரை வழங்காதது மிகவும் வேதனை அளிக்கிறது. தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருந்து வரும் நிலையில் அரசு அறிவித்த ஊதிய உயர்வை ரப்பர் கழகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கி ரப்பர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். இந்த பிரச்சினை குறித்து முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

    மேலும், கீரிப்பாறை செல்லும் சாலைகள் விரைந்து செப்பனிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என விஜய் வசந்த் கூறினார்.

    இந்த நிகழ்வின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், பொதுச்செயலாளர் பால்ராஜ், காங்கிரஸ் வட்டார தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் மஞ்சுஸா, மாவட்ட செயலாளர் சகாயராஜ், வர்த்தக பிரிவு மாநில செயல் தலைவர் ராமசாமி, ஐ.என். டி. யூ.சி கிழக்கு மாவட்ட தலைவர் பொன்ராஜா, சட்ட ஆலோசகர் ஜான் செளந்தர், அழகியபாண்டியபுரம் கிராம தலைவர் காங்கிரஸ் ராமதாஸ், அழகியபாண்டியபுரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராபி, நிர்வாகிகள் ஜினோ, ஜோசப் ஜெரால்டு சீலன், மாசிலாமணி, சுந்தரராஜ், செய்யது அலி மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×