என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்த ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அணில் மிஸ்ராம் தலைமையில் நடந்தது.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர் பெயரை நீக்கும் பணியை தேர்தல் ஆணையமே மேற்கொள்ள வேண்டும்
- வேலூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
- எத்தனை வசதிகள் இருந்தாலும் போட்டோ சரியாக தெரியவில்லை என குற்றச்சாட்டு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்தம் நீக்கம் செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. வாக்காளர் பட்டியல் தேர்தல் பார்வையாளர் அணில் மிஸ்ராம் தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தேர்தல் தாசில்தார் ஸ்ரீராம், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது திருத்தம் செய்வது தொடர்பாக அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் 18 வயது தொடங்கியவர்கள் பெயரை சேர்க்கலாமா அப்படி சேர்த்தால் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறுமா.
கடந்த மாநகராட்சி தேர்தலில் போது நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஒருவர் தனது அடையாள அட்டை மூலம் வாக்களித்தார்.
மேலும் இறந்தவர்கள் பெயரை முழுமையாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவில்லை. இறந்தவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் இறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். அனைவருமே இறப்பு சான்றிதழுடன் சென்று பெயரை நீக்க முடியாது.
எனவே இதனை தேர்தல் ஆணையமே கையில் எடுத்துக் கொண்டு இறந்தவர்கள் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மாநகராட்சி நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் இறப்புச் சான்று வழங்கப்படுகிறது. அப்படி இறப்பு சான்றிதழ் வழங்கும் போது அவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் முறையை அமல்படுத்த அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும் வாக்காளர் பட்டியலில் எத்தனை முறை திருத்தம் செய்தாலும் பெயர் முழுமையாக திருத்தப்படாமல் வருகிறது. அதே போல அடையாள அட்டைகளில் போட்டோ மாறி மாறி வருகிறது. மேலும் பல நவீன வசதிகள் வந்த பிறகும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள போட்டோ தெளிவாக தெரிவதில்லை.
இது போன்ற தவறுகளை களைய வேண்டும். மாணவ மாணவிகள் எளிதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வசதியாக கல்லூரிகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து வலியுறுத்தினர்.
கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசிய தாவது
வேலூர் மாவட்டத்தில் தற்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் திருத்தம் செய்வது தொடர்பாக முகாம்கள் நடந்து வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திருத்தம் செய்யப்பட்ட பட்டியல் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்வையிட்டு பொதுமக்கள் தங்களுடைய வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தவறு இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம்.
18 வயதானவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தாலும். அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு 18 வயது நிரம்பிய பிறகு பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.
தற்போது வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்கு வாக்குச்சாவடி முகவர்கள் உதவி செய்ய வேண்டும். ஓட்டு போடும் சமயத்தில் தேர்தல் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் 90 சதவீதம் வாக்களிக்க விட மாட்டார்கள்.
தேர்தலுக்கு முன்பாக அனைவரும் தங்களது வாக்காளர் அட்டையை சரி பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும். கல்லூரிகளில் ஏற்கனவே வாக்குச்சாவடிகள் இயங்கி வருகிறது. அதன் மூலம் மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்தம் சம்பந்தமான ஆய்வுக் கூட்டத்தில் தாசில்தார் ஸ்ரீராம் கூறுகையில்:-
தற்போது தேர்தல் ஆணையம் voter helpline என்ற புதிய ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.இதனை ஒவ்வொருவரும் தங்களது செல்போனில் பதிவேற்றம் செய்து அதில் கேட்கப்படும் பட்டியலை நிரப்பி பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை தற்போது எந்த தொகுதியில் எந்த வரிசையில் உள்ளது என்ற விவரம் உங்களுக்கு தெரியும்.மேலும் அதனை நீக்கம் செய்தால் உடனடியாக உங்களுக்கு தெரிந்து விடும் அதன் மூலம் நீங்கள் பட்டியலில் நீக்கப்படுவதை தவிர்க்கலாம் என்றார்.






