என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாணியம்பாடி நகராட்சி புதூர் பகுதியில் நகராட்சி பகுதி சபா கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் எம்.எல்.ஏக்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், கலெக்டர் அமர்குஷ்வாஹா, நகர சபை தலைவர் உமா சிவாஜி கணேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ். சாரதி குமார், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா உள்பட பலர் உள்ளனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 1603 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
- நகராட்சிகளில் பகுதி சபா கூட்டம் முதன்முதலாக நடந்தது
- உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடந்தது
வேலூர்:
கிராமப்புற மக்களிடையே திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் இன்று நவம்பர் மாதம் 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் 247 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. வேலூர் அருகே உள்ள வெங்கடாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது.
நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆத்தூர் குப்பம் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. வாலாஜா ஒன்றியம் முகுந்தராயபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு ,ஆரணி ஆகிய நகராட்சிகளில் பகுதி சபா கூட்டங்கள் முதன் முதலாக இன்று நடந்தன.
திருவண்ணாமலை நகராட்சி 1-வது வார்டு பச்சையம்மன் கோவில் பகுதியில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு மனு வாங்கினார்.
இதேபோல வேலூர் மாநகராட்சி மற்றும் குடியாத்தம், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய நகராட்சிகளிலும் தற்போது பகுதி சபாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் இன்று முதன் முதலாக பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றன.






