என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு விநியோகிக்க 4.42 லட்சம் இலவச வேஷ்டி, சேலைகள் தயார் நிலையில் உள்ளது
- கோ-ஆப்டெக்ஸ் குடோனில் கலெக்டர் ஆய்வு
- டோக்கன் வழங்குவது தொடர்பாக பணிகள் தீவிரம்
வேலூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்திற்கு தேவைப்படும் சுமார் 4,42,000 வேஷ்டிகளும் 4,42,000 சேலைகளும் கோ-ஆப்டெக்ஸ் குடோனில் வைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
அப்போது மண்டல மேலாளர் நாகராஜன், மேலாளர் முத்துராஜ், ஆய்வு மைய மேலாளர் விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
அதை தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்திற்கு தேவையான வேஷ்டி சேலைகள் மாவட்டத்தில் உள்ள மூன்று குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது.
அவை சரிபார்க்கப்பட்டு தரமான பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேதமடைந்த பொருட்கள் தனியாக எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வேஷ்டி சேலைகள் அந்தந்த தாலுகா உட்பட்ட ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது. டோக்கன் வழங்குவது தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து வேஷ்டி சேலைகள் அனுப்பப்படும்.
வள்ளிமலை பள்ளி வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள மணல் குறித்து புகார் வந்தது அது தொடர்பாக தாசில்தாருக்கு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது யார் அங்கு மணல் கொட்டினார் என்பது குறித்து கண்டறியப்பட்டு அது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பரவி வரும் புதிய கொரோனாவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது என்றார்.
இதைத் தொடர்ந்து மேல்மொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குடியிருப்புகள் கட்டும் பணி பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். இங்கு கட்டப்படும் வீடுகளில் குளியலறை கழிவறை தனித்தனியாக கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டு மார்ச் மாத தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.






