search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும்- கலெக்டரிடம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மனு
    X

    மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.கலெக்டர் ஆகாஷை சந்தித்து பொன்னாடை அணிவித்த போது எடுத்தபடம்.

    ஆலங்குளம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும்- கலெக்டரிடம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மனு

    • மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.கலெக்டர் ஆகாஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
    • ஆலங்குளத்தை மையமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷை நேரில் சந்தித்து நேற்று கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆலங்குளம் ஒன்றியம், நாரணபுரம் ஊராட்சியை சுற்றியுள்ள பல கிராமங்களில் வசித்து வரும் மக்கள் வீராணம் பகுதிக்கு சென்று வர சிற்றாற்றை கடந்து செல்ல வேண்டும். அல்லது 10 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சிற்றாற்றின் குறுக்கே கீழவீராணம் முதல் நாரணபுரம் வரை இணைப்பு பாலம் அமைக்க வேண்டும். மேலும் குறிப்பன்குளம் கிராமத்தில் குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். ஆலங்குளம் பகுதிக்கு புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைத்து தர வேண்டும். ஆலங்குளத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையை விரிவாக்கம் செய்து மேம்படுத்தி முறையாக பணியாட்களை நியமனம் செய்ய வேண்டும்.

    ஆலடிப்பட்டி, வெங்கடேஸ்வரபுரம், அய்யனார்குளம், உடையாம்புளி, அத்தியூத்து, பெத்தநாடார்பட்டி, மாதாபுரம், பாப்பாக்குடி, வடக்கு அரியநாயகிபுரம் ஆகிய ஊர்களில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும். மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்து தர வேண்டும். ஆலங்குளம் பேரூராட்சி 9-வது வார்டு, பூலாங்குளம் பஞ்சாயத்து சுப்பிரமணியபுரம் கிராமம், வெங்கடாம்பட்டி கிராமம், அழகம்மாள்புரம் பகுதிகளில் நியாய விலை கடைகள் அமைத்து தர வேண்டும். ஆலங்குளம் பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை இல்லாத காரணத்தால் அரசு பஸ்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல் பஸ் நிலையத்தில் உள்ளே நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே கீழப்பாவூர் ஒன்றியம் ஆண்டிப்பட்டி கிராமத்தில் உள்ள இடத்தை பயன்படுத்தி அங்கு அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும். தென்காசியை தலைமையிடமாக கொண்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தற்போது செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து ஆலங்குளம் ஒன்றியம், ஆலங்குளம் பேரூராட்சி, கடையம் ஒன்றியம் மற்றும் கீழப்பாவூர் ஒன்றியம் ஆகியவற்றை முறையாக தென்காசி மற்றும் சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் இருந்து பிரித்து ஆலங்குளத்தை மையமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும். பாப்பாக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓடைக்கரை துலுக்கப்பட்டி கிராமத்தை தற்போது உள்ள பாப்பாக்குடி ஊராட்சியில் இருந்து பிரித்து தனி ஊராட்சியாக உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×