search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டில் 100 அடி இடைவெளியில் ஒரே இடத்தில் இரண்டு பயணிகள் நிழற்கூடம் - எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் எதிர்ப்பு
    X

    களக்காட்டில் 100 அடி இடைவெளியில் ஒரே இடத்தில் இரண்டு பயணிகள் நிழற்கூடம் - எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் எதிர்ப்பு

    • களக்காடு-பணகுடி சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை உள்ளது.
    • பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இதற்கான நிதியை வேறு வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    களக்காடு:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் மீராஷா அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோவில்பத்து பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சார் பதிவாளர் அலுவலகம், நகராட்சி அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இங்குள்ள களக்காடு-பணகுடி சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை உள்ளது.

    களக்காடு வழித்தடத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. தற்போது இந்த பயணிகள் நிழற்கூடம் நகராட்சி நிர்வாகத்தினர் சார்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே உள்ள இந்த பயணிகள் நிழற்கூடம் அருகே 100 அடி இடைவெளியில் அதன் அருகிலேயே, புதியதாக பயணிகள் நிழற் கூடம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    அப்பகுதி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். ஏற்கனவே ஒரு பயணிகள் நிழற்கூடம் இருக்கும் போது, அதன் அருகிலேயே புதிய நிழற்கூடம் கட்டுவதால் அரசின் நிதி வீணாகி வருகிறது. அருகருகே 2 பஸ் நிறுத்தங்கள் அமைத்தால் பஸ்களும் நின்று செல்வதில் சிக்கல் ஏற்படும்.

    புதியதாக கட்டப்படும் பயணிகள் நிழற் கூடத்தின் அருகில் முள்புதர்கள் அடர்ந்துள்ளதால் பெண்கள், குழந்தைகள் பஸ்சுக்காக காத்திருக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே இந்த கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இதற்கான நிதியை வேறு வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×