search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்ததில் சிறுவன் உள்பட 2 பேர் பலி
    X

    கோவில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்ததில் சிறுவன் உள்பட 2 பேர் பலி

    • கோவில் திருவிழாவிற்காக பட்டாசுகளை ஏற்றி வந்த மினிடோர் வாகனத்தில் தீப்பொறி பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.
    • திருவிழாவில் 2 பேர் உயிரிழந்ததால் பள்ளிப்பட்டி கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் கடந்த இரு தினங்களாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 10 மணி அளவில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

    அப்போது சாமியை அலங்கரித்து சரக்கு வாகனத்தில் வைத்து பொதுமக்கள் ஊர்வலம் எடுத்து சென்றனர். இந்த சரக்கு வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ராகவேந்திரன் (வயது26) என்பவர் ஓட்டி சென்றார்.

    சாமி ஊர்வலத்தின்போது வானவேடிக்கைகள் பட்டாசுகள் வெடித்தனர். மேலும் வெடிப்பதற்காக பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்கள் அந்த சரக்கு வாகனத்திலேயே வைத்திருந்தனர்.

    ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது பட்டாசு மின் கம்பத்தில் பட்டு மீண்டும் அந்த சரக்குவாகனத்தில் விழுந்தது. இதில் சரக்கு வாகனத்தில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. பின்னர் அந்த சரக்கு வாகனமும் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

    இந்த விபத்தில் பட்டாசு வெடித்ததை வேடிக்கை பார்த்த அசோகன் மகன் ஆகாஷ் (7) சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் படுகாயம் அடைந்த ராகவேந்திரன், நொச்சிப்பட்டியை கிராமத்தை சேர்ந்த ஆதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ராகவேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பட்டாசு வெடி விபத்தில் இறந்த சிறுவன் ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×