search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்கொம்பு பாலத்தில் திடீர் விரிசல்
    X

    முக்கொம்பு பாலத்தில் 'திடீர்' விரிசல்

    • கொள்ளிடம் பாலத்தை தொடர்ந்து, காவிரி பாலத்திலும் ‘திடீர்’ விரிசல்
    • மக்கள் அச்சத்தை போக்க உடனே சீரமைக்க கோரிக்கை

    ஜீயபுரம்,

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. அவ்வாறு வரும் மேட்டூர் அணை நீர் திருச்சி திருப்பராய்த்துறையில் தீர்த்தவாரி நடைபெறும் காவிரி ஆற்றின் அருகில் கூம்பு போன்ற இட அமைப்பை கொண்டுள்ளது.அந்த பகுதியில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிந்து செல்வதால் இந்த பகுதி முக்கொம்பு என பெயர் பெற்று இன்று வரை திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் பாலம் சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த்தாகும்.

    இதற்கிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிக வெள்ளப்பெருக்கின் காரணமாக 5-வது முதல் 9-வது மதகு வரையுள்ள பாலம் இடிந்து விழுந்தது. இதனைத்தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கொள்ளிடம் பாலம் கட்டப்பட்டு உள்ளது.அதேபோல் காவிரி பாலமானது 42 மதகுகளைக் கொண்டதாகும். இந்த பாலம் கடந்த 1974 ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு கால கட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அவ்வப்போது காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றும், வண்ணம் பூசும் பணியும் நடைபெறும. இந்த பாலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.இதற்கிடையே காவிரி பாலத்தில் உள்ள 35-வது மதகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. குறிப்பாக இந்த பாலமானது தன்னுடைய பக்கவாட்டிலிருந்து விலகி மேற்கு பகுதி நோக்கி சாய்ந்துள்ளது. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு லேசான அளவில் கண்டறியப்பட்ட விரிசல் ஆண்டுகள் செல்லச் செல்ல அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

    இதனால் காவிரி பாலம் உடையும் அபாய நிலையில் உள்ளதா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொதுபணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து மேலணை காவிரி பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுத்து பாலத்தின் முன் பகுதியில் இரும்பு தூண் கொண்டு தடுப்பு அமைத்தனர்.காவிரி பாலத்தின் விரிசல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் நாளடைவில் இரும்பு தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டு பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் மற்றும வாழைக்காய் பாரம் ஏற்றிய லாரிகள் சர்வ சாதாரணமாக சென்று வருகின்றன.இந்த நிலையில் காவிரி பாலத்தில் பழுதான 35-வது மதகிற்கு அருகிலுள்ள 38-வது மதகு பகுதியில் பாலத்தின் பக்கவாட்டில் இருந்து புதியதாக விரிசல் ஏற்பட்டு உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பாலத்தில் மற்றொரு மதகுப் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.பாலத்தின் அடிப்பகுதியில் காப்பர் பீம் போட்டு கட்டப்பட்டிருப்பதால் பாலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் இயற்கையின் சீற்றத்தோடு ஒப்பிடுகையில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த பாலத்தை பலப்படுத்தி மக்கள் அச்சத்தை போக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

    Next Story
    ×