என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மரக்கடை பகுதியில் தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- பள்ளிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருச்சி,
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மரக்கடை பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் அழகிரிசாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் திலகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செயலாளர் பெரியசாமி வரவேற்றார். இதில் சங்கத்தின் மாநில தலைவர் பி.அன்பரசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். முன்னாள் மாநில பொருளாளர் பி.அருள் சுந்தரராஜன் சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். பள்ளிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாநில நிர்வாகிகள் குமாரவேல், நாகராஜன், அறிவழகன், மாவட்ட பொறுப்பாளர்கள் சிவக்குமார், கவிதா உட்பட ஏராளமான தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






