search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை முதலீட்டு திட்டம் மூலம் ரூ.100 கோடி மோசடி- தம்பதியரை கைது செய்ய தனிப்படை விரைந்தது
    X

    நகை முதலீட்டு திட்டம் மூலம் ரூ.100 கோடி மோசடி- தம்பதியரை கைது செய்ய தனிப்படை விரைந்தது

    • நகை முதலீட்டு திட்டம் மூலம் ரூ.100 கோடி மோசடி
    • கணவன்-மனைவியை கைது செய்ய தனிப்படை விரைந்தது

    திருச்சி

    திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் உள்பட 9 இடங்களில் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை இயங்கி வந்தது. இதனை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக இருந்து நிர்வகித்து வந்தனர்.

    இந்த நகை கடை நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் நகைகளுக்கு செய்கூலி இல்லை சேதாரம் இல்லை என அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் நடிகர் நடிகைகள் மூலமாக முதலீடு செய்யும் நகைக்கு மாதந்தோறும் 2 சதவீத வட்டித்தொகை, பத்து மாத கடைசியில் முதலீடு தொகைக்கும் அதிகமாக தங்க நகைகள் தருவதாகவும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

    இதனை நம்பி பலர் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வட்டித் தொகைக்காக வழங்கப்பட்ட காசோலைகள் பணமில்லாமல் திரும்பிய நிலையில் 9 கிளை நகைக் கடைகளையும் மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தலை மறைவாகிவிட்டனர்.

    அதைத் தொடர்ந்து முதலீடு செய்து ஏமாந்த 635 பேர் திருச்சி, மதுரை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த, புகார்களின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்யபிரியா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் திருச்சி மெயின் கிளை நகைக்கடை மேலாளர் நாராயணன் என்பவரை கைது செய்தனர். மேலும், திருச்சி சென்னை உள்பட 8 கடைகள் 3 வீடுகள் உள்பட மொத்தம் 11 இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில்

    237 பவுன் தங்க நகைகள்,

    22 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.1,48,711 ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நகைக்கடை உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீது மோசடி, ஏமாற்றுதல், கூட்டு சதி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சுமார் ரூ. 14 கோடி மோசடி செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைதான மேலாளர் நாராயணன் மதுரையில் உள்ள முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தலைமறைவாக இருக்கும் பிரணவ் ஜூவல்லர்ஸ் இயக்குனர்கள் மதன் அவரது மனைவி கார்த்திகா ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் முகாமிட்டு அவர்களைத் தேடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பணம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது நன்கு அறிமுகமான வாடிக்கையாளர்களிடம் மதன் செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு புகார் எதுவும் கொடுக்க வேண்டாம். பணத்தை திருப்பித் தருவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என கூறிவந்துள்ளார்.

    ஆனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து காவல்துறை கவனத்திற்கு செல்லவும் தனது செல்போன்கள் அனைத்தையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். பல கோடி மோசடி செய்துள்ள மதனின் கடைகளில் குறைந்த அளவிலேயே தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் கிளையில் மட்டுமே அதிகபட்சமாக 90 பவுன் நகை கைப்பற்றப்பட்டுள்ளது.

    மோசடி பணத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கும்பகோணம், நாகர்கோவில் உள்பட தனது நகைக்கடை நிறுவனம் அமைந்துள்ள அனைத்து பகுதிகளிலும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக தெரிகிறது. ஆகவே அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×