search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகார், மனுக்கள் மீது விரைந்து விசாரணை-தமிழ்நாட்டில் முசிறி காவல் நிலையம் முதலிடம்
    X

    புகார், மனுக்கள் மீது விரைந்து விசாரணை-தமிழ்நாட்டில் முசிறி காவல் நிலையம் முதலிடம்

    • புகார், மனுக்கள் மீது விரைந்து விசாரணையில் தமிழ்நாட்டில் முசிறி காவல் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது
    • டி.ஜி.பி. சைலேந்திர பாபு வாழ்த்து

    முசிறி

    திருச்சி மாவட்டம் முசிறியில் சீர்மிகு சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குழுவினர் நேரில் வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது காவல் நிலையத்தின் சுகாதாரம், பராமரிப்பு மற்றும் வரப்பெற்ற புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை, நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடித்தல் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் அணுகுமுறை, காவல் நிலையத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்குழு முசிறி காவல் நிலையத்திற்கு தகுதி சான்றிதழுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த முதல் காவல் நிலையமாக மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்து சான்றிதழை சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒன்றிய அரசு அனுப்பி வைத்திருந்தது. விருதுக்கான சான்றிதழை சென்னை சென்று நேரில் பெற்றுக் கொண்ட முசிறி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமை காவலர் மகாமணி, காவலர் ஆனந்தராஜ், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது காவல்துறை கூடுதல் இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு சங்கர் உடனிருந்தார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், டி.ஐ.ஜி. சரவணசுந்தர், எஸ்.பி. சுர்ஜித்குமார், முசிறி போலீஸ் டி.எஸ்.பி. யாஸ்மின் ஆகியோர் முசிறி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் முசிறி காவல் நிலையம் முதலிடம் பெற்றுள்ள நிகழ்வு முசிறி நகர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    Next Story
    ×