search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபரிடம் ரூ. 25 லட்சம் மோசடி
    X

    வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபரிடம் ரூ. 25 லட்சம் மோசடி

    • ஒரு இடத்தை காட்டி இந்த இடத்தில் கடை கட்டி தருவதாக கூறினார்
    • வெகு நாட்கள் ஆகியும் கடை கட்டி தரவில்லை

    திருச்சி

    திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் ரெங்கா நகரில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வருபவர் சாதிக் அகமது (வயது 57).

    இவர் மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2021-ம் ஆண்டு தாயகம் திரும்பினார்.

    பின்னர் நண்பர் இஸ்மாயில் என்பவரை அணுகி தொழில் தொடங்க ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அவர் திருச்சி மதுரை ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே ஒரு இடத்தை காட்டி இந்த இடத்தில் கடை கட்டி தருவதாகவும், அதில் தொழில் தொடங்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.

    இதை நம்பிய சாதிக் அகமது கடந்த 2022-ம் வருடம் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி ரூ.5 லட்சமும், 14-ந் தேதி ரூ.10 லட்சமும், மீண்டும் 24-ந் தேதி ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்ச ரூபாய் பணத்தை முருகானந்தம் மற்றும் நிஜாமுதீன் ஆகியோரிடம் கொடுத்தார்.

    ஆனால் அவர்கள் வெகு நாட்கள் ஆகியும் கடை கட்டி தரவில்லை. கொடுத்த பணமும் திருப்பி தரவில்லை.

    பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட சாதிக் பணத்தை பெற்றுக் கொண்ட முருகானந்தம், நிஜாமுதீன் ஆகியோரிடம் பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்ததோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதை அடுத்து பாதிக்கப்பட்ட சாதிக் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மோசடி செய்த பணத்தை மீட்டு தருமாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் கடந்த மாதம் புகார் கொடுத்தார்.

    இந்த புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் முருகானந்தம், நிஜாமுதீன் ஆகிய இருவர் மீதும் மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் திருச்சி மேலப்பஞ்சபூர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெயா.

    இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த தேவி (39) என்பவர் ரூ. 1500க்கு பொருட்கள் கடன் வாங்கியுள்ளார்.

    பின்னர் அந்த தொகையை திரும்ப செலுத்தவில்லை. இதை கேட்ட போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தேவி ஜெயாவை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வந்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 21 ) கஞ்சா விற்றுக் கொண்டிரு ந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதே போன்று திருச்சி இ.பி. ரோடு சினிமா தியேட்டர் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த இ.பி. ரோடு பகுதியை சேர்ந்த ராஜா ( 28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்

    Next Story
    ×