என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி
- முசிறி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்துள்ளது
- இரு வீட்டு பெற்றோர் சமாதானமடைந்ததை தொடர்ந்து, மாப்பிள்ளை வீட்டுக்கு மணமக்கள் அழைத்து செல்லப்பட்டனர்
முசிறி,
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் மலையப்பபுரத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 26). இவர் முசிறியில் உள்ள ஒரு பிஸ்கட் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறார். இதேபோல் ஈரோடு மாவட்டம் பாசூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாத்தாள் (19) 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். வசந்தகுமார் சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு அருகே பாச்சூரில் வேலை பார்த்த போது கம்பெனிக்கு அருகில் வசித்த வேலாத்தாளுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இருவர் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதன் காரணமாக சம்பவத்தன்று வேலாத்தாள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 3-ம் தேதி முசிறி காமாட்சி அம்மன் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் வசந்தகுமாரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பெற்றோரிடமிருந்து பாதுகாப்புக் கோரி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து விசாரணை செய்தனர். போலீசாரின் அறிவுரையின் பேரில் அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் மாப்பிள்ளை வீட்டார் புதுமண ஜோடியை மகிழ்ச்சியுடன் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.






