search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் ஏரிச்சாலையில் கனரக வாகனங்களை இயக்குவதால் போக்குவரத்து நெரிசல்
    X

    கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    கொடைக்கானல் ஏரிச்சாலையில் கனரக வாகனங்களை இயக்குவதால் போக்குவரத்து நெரிசல்

    • ஏரி சாலையில் பஸ்கள் நுழைவதால் அன்றாடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவித்து வரும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.
    • இதனால் ஏரிச்சாலையை சுற்றி கனரக வாகனமான பஸ்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பல்வேறு நாட்டவர், பல்வேறு மாநிலத்தவர்கள் விரும்பி ரசிக்க வரும் முக்கிய சுற்றுலா தலமாகும். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை,குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவர்.

    மேலும் நகர் பகுதியில் மிகவும் அதிகமாக நேரத்தை செலவிடும் பகுதிகளில் கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவைகள் ஆகும். இதில் குடும்பம் குடும்பமாக மிகவும் ரசித்து உற்சாகம் அடையும் வகையில் அதிகமான நேரத்தை செலவிடும் பகுதிகளில் ஏரிச்சாலை மிக முக்கிய இடங்களில் ஒன்று. ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்வதோடு நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைவது வழக்கம்.

    ஏரிச்சாலையில் ஒரு சில நேரங்களில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் சுற்றுலா பயணிகள் கடும் அச்சத்தில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் மிக நீளமான பயணிகள் பேருந்துகளை ஏரிச்சாலையில் இயக்குவதால் ஏரிச்சாலையின் பல குறுகிய வளைவுச்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதன் காரணமாக பல நாட்கள் ஏரிச்சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் மற்றும் சைக்கிள் சவாரி குதிரை சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி சாலையைக் கடக்க முடியாமல் நிற்கும் கனரக வாகனமான பஸ்களால் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். தினசரி இதுபோல் ஏரி சாலையில் பஸ்கள் நுழைவதால் அன்றாடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவித்து வரும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஏரி சாலையை சுற்றி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் தங்கள் கடைகளின் கூரைகளை இடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஒரு சில நேரங்களில் ஒரு சில கடைகள் சேதம் அடைந்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

    இதோடு மட்டுமல்லாமல் தண்ணீர் லாரிகளும் அதிவேகமாக செல்வதால் சுற்றுலா பயணிகள் அச்சமடையும் சூழலும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஏரிச்சாலையை சுற்றி கனரக வாகனமான பஸ்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×