search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டையில் பயங்கரம் கள்ளத்தொடர்பை கண்டித்த வியாபாரி எரித்துக் கொலை: கள்ளக்காதலி, கள்ளக்காதலன் கைது
    X

    உளுந்தூர்பேட்டையில் பயங்கரம் கள்ளத்தொடர்பை கண்டித்த வியாபாரி எரித்துக் கொலை: கள்ளக்காதலி, கள்ளக்காதலன் கைது

    • ஆறுமுகம் மற்றும் கவிதா இருவருக்கும் பழக்கமாகி கள்ளக்காதல் ஏற்பட்டு பாலக்கரையில் குடும்பமாக வசித்து வந்தனர்.
    • ஆறுமுகம் பலத்த தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் பட்டாணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வந்தார். இதேபோல விருத்தாசலம் அருகேயுள்ள முருகன்குடியை சேர்ந்த கவிதா (28). இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பழக்கமாகி கள்ளக்காதல் ஏற்பட்டு பாலக்கரையில் குடும்பமாக வசித்து வந்தனர். ஆறுமுகத்தின் பட்டாணி கடைக்கு உளுந்தூர்பேட்டை பு.கிள்ளனூரை சேர்ந்த வைத்தி (55) அடிக்கடி வந்து சென்றார். இதில் வைத்திக்கும், கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனை ஆறுமுகம் கண்டித்துள்ளார். இருந்தபோதும் வைத்தியும், கவிதாவும் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக கவிதா தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக ஆறுமுகத்திடம் கூறிச் சென்றார். ஆனால், அவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள வைத்தி வீட்டில் சென்றது ஆறுமுகத்திற்கு தெரியவந்தது. இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ஆறுமுகம் கவிதாவை எரித்துக்கொல்ல முடிவெடுத்து பெட்ரோல் பாட்டிலுடன் உளுந்தூர்பேட்டைக்கு சென்றார். அங்கு வைத்தியின் வீட்டில் இருந்த கவிதாவின் மீது பெட்ரோல் ஊற்ற முயற்சித்தார். அங்கிருந்த வைத்தி பாட்டிலை பிடுங்கி ஆறுமுகத்தின் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் ஆறுமுகம் முற்றிலும் எரிந்த நிலையில் பலத்த தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதேசமயம் வைத்திக்கும் லேசான தீக்காயங்களுடன் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதில் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை பொறுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் ஆகியோர் கவிதா, வைத்தி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×