search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று இறுதி வேலைநாள்: பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை
    X

    இன்று இறுதி வேலைநாள்: பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

    • ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.
    • எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சென்னை :

    1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான 2022-23-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்று காரணமாக சற்று தாமதமாகத் தொடங்கினாலும், திட்டமிட்டபடி பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின்றன.

    அதன்படி, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் (மார்ச்) 13-ந்தேதி தொடங்கி, கடந்த 3-ந்தேதியுடனும், பிளஸ்-1 வகுப்புக்கு கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கி, கடந்த 5-ந்தேதியுடனும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 6-ந்தேதி ஆரம்பித்து, 20-ந்தேதியுடனும் பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

    இதில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கின்றன. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடக்கிறது.

    ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டு இருந்தபடி, ஆண்டு இறுதித்தேர்வுகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில், பெரும்பாலான பள்ளிகளுக்கு இறுதித்தேர்வு நடத்தப்பட்டு, கோடை விடுமுறையும் விடப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கல்வித்துறையின் நாட்காட்டியின்படி, இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு இறுதி வேலைநாள் ஆகும்.

    அந்த வகையில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு இன்று ஆண்டு இறுதித்தேர்வின் கடைசித்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை எழுதி முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

    கோடை விடுமுறை முடிந்து வழக்கம் போல, ஜூன் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அப்போது பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவது குறித்த அறிவிப்பை கல்வித்துறை முடிவு செய்து வெளியிடும் என்று பேசப்படுகிறது.

    Next Story
    ×