என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவன் திடீர் சாவு
- அரசு உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்தார்
- போலீஸ் விசாரணை
போளூர், ஜூலை.3-
திருவண்ணாமலை அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியம் அரசவெளி கிராமத்தில் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் நம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த செவத்தான் மகன் சிவகாசி (வயது 15) என்ற சிறுவன் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி சிவகாசிக்கு முகத்தில் முகப்பரு வந்து சீழ் வடிந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஆசிரியை மகாலட்சுமி அதை சுத்தம் செய்துள்ளார். பின்ன சிவகாசியின் தந்தை செவத்தானுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் அங்கு வந்த செவத்தான் தனது மகனை நம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வேலூர் தனியார் மருத்துவமனையில் சென்று காட்டுங்கள் என கூறினர். தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று காட்டிய போது டாக்டர்கள் சிவகாசி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செவத்தான் ஜமுனா மரத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் எப்படி இறந்தான் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






