search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவனை கடத்தி கொலை செய்த பெண்ணிற்கு ஆயுள் தண்டனை
    X

    கோப்புபுடம்

    சிறுவனை கடத்தி கொலை செய்த பெண்ணிற்கு ஆயுள் தண்டனை

    • ரூ.25 ஆயிரம் அபராதம்
    • திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அடுத்த வெளுங்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துணை ராணுவத்தில் பணியாற்றியவர். இவரது மனைவி பரிமளா, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்களது இளைய மகன் வினோத்குமார் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றவர் திடீரென மாயமானார். அவரை பல இடத்தில் தேடியும் கிடைக்காததால் அது குறித்து ராமகிருஷ்ணன் கலசபாக்கம் போலீசில் தனது மகனை காணவில்லை என்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் ராமகிருஷ்ணனின் செல்போன் எண்ணிற்கு மர்ம நபர்கள் பேசி வினோத்குமாரை கடத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மாயமான வினோத்குமாருடன் பள்ளியில் படித்து வந்த வெளுங்கனந்தல் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் ராமசந்திரன் என்பவர் தான் வினோத்குமாரை பள்ளியில் இருந்து அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ராமசந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவரது தாயார் சாந்தி தான் அழைத்து வர சொன்னதாக அவர் கூறினார்.

    பின்னர் போலீசார் சாந்தியிடம் விசாரணை நடத்தியதில், அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருந்ததால் வினோத்குமாரை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தியதும், போலீசார் விசாரணை நடத்துவதை அறிந்ததும் போலீசில் மாட்டி கொள்ளக் கூடாது என்று அச்சிறுவனை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்ததையும் ஒப்பு கொண்டார். இதையடுத்து சாந்தியையும், அவரது மகன் ராமசந்திரனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் சாந்தியின் உறவினர் நண்பர்கள் சென்னையை சேர்ந்த சுபாஷ், பசுபதி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    மேலும் வினோத்குமார் கொலை சம்பவத்தின் போது ராமசந்திரனுக்கு 15 வயது என்பதால் அவரது வழக்கு விசாரணை திருவண்ணாமலை சிறார் நீதிமனறத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜமுனா தீர்ப்பு கூறினார். அதில் சிறுவன் வினோத்குமாரை கடத்தில் கொலை செய்த குற்றத்திற்காக சாந்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் சுபாஷ் மற்றும் பசுபதி மீது போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து சாந்தி பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×