search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் - 10 பேர் போட்டியின்றி தேர்வு
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் - 10 பேர் போட்டியின்றி தேர்வு

    • 22 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.
    • மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் மாவட்ட ஊராட்சியில் இருந்து 8 உறுப்பினர்களும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து 10 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநகராட்சி, மாவட்ட ஊராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்தம் 454 பேர் வாக்களிப்பார்கள். அவர்கள் உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.202-ல் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    வேட்பு மனு பரிசீலனை முடிந்து நேற்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். 22 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். பின்னர் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கண்ணம்மாள், கிருஷ்ணவேணி, சக்திவேல், சாமிநாதன், சிவகாமி, சிவபாலகிருஷ்ணன், சீதாலட்சுமி, பழனிச்சாமி, பானுமதி, மலர்விழி, ரஞ்சிதம், ஜெயந்தி ஆகிய 12 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் இருந்து 8 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். வருகிற 23-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்று அன்று மாலை வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

    மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் மற்றவர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் 10 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மடத்துக்குளம் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் (வார்டு 10), ஊத்துக்குளி பேரூராட்சி கவுன்சிலர் கண்மணி (வார்டு 14), தாராபுரம் நகராட்சி கவுன்சிலர் கமலக்கண்ணன் (வார்டு 16), அவினாசி பேரூராட்சி கவுன்சிலர் சிவப்பிரகாஷ் (வார்டு 1), திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் பத்மாவதி (வார்டு 21), தளி பேரூராட்சி கவுன்சிலர் மாணிக்கம் (வார்டு 15), காங்கயம் நகராட்சி கவுன்சிலர் மீனாட்சி (வார்டு 5), திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர் யுவராஜ் (வார்டு 9), உடுமலை நகராட்சி கவுன்சிலர் ராமதாஸ் (வார்டு 28), பல்லடம் நகராட்சி கவுன்சிலர் ராஜசேகரன் (வார்டு 2) ஆகிய 10 பேர் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×