search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளி மாநிலங்களில் பட்டுக்கூடுகளை விற்பனை செய்யும் விவசாயிகள்
    X

    கோப்புபடம்.


    வெளி மாநிலங்களில் பட்டுக்கூடுகளை விற்பனை செய்யும் விவசாயிகள்

    • பட்டுக்கூடு வெளி மாநிலங்களுக்குச்செல்வதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கும் 'செஸ்' வரியும் இழப்பு ஏற்படுகிறது.
    • நூல் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சிண்டிகேட் அமைக்காமல் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் வெண்பட்டுக்கூடு உற்பத்தி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 1,500 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி உள்ளது.1,200க்கும் மேற்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக, பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.இளம் புழு வளர்ப்பு மனைகளில், முட்டையில் இருந்து 7 நாட்கள் வளர்ந்த புழுக்கள் வாங்கி வந்து, மனைகளில் 22 நாட்கள் வளர்க்கும் போது கூடு உற்பத்தியாகிறது.

    இப்பகுதிகளில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள், உடுமலை மைவாடி, கோவை,சேலம், ஓசூர், ராசிபுரம் உள்ளிட்ட பட்டுக்கூடு மார்க்கெட்களுக்கு விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு சென்று வந்தனர்.

    தற்போது தமிழகத்தில் பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள் உரிய விலை நிர்ணயிப்பதில் குளறுபடி, தொகை வழங்குவதில் தாமதம் மற்றும் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக கர்நாடகா மாநிலம், ராம் நகர் பட்டுக்கூடு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இது குறித்து தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: - தமிழகத்திலுள்ள பட்டுக்கூடு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை அருகிலுள்ள பட்டு வளர்ச்சித்துறை கொள்முதல் மையங்களில் விற்பனை செய்து வந்தனர்.தற்போது விலை நிர்ணயிப்பதில் உள்ள குளறுபடி மற்றும் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக குறைந்த விலை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.

    தமிழக மையங்களில் 600 முதல் 650 வரை கிலோவுக்கு நிர்ணயிக்கப்படும் நிலையில் கர்நாடகா மாநிலம் ராம் நகரில் 800 முதல் 900 ரூபாய் வரை அதே பட்டுக்கூடு விற்பனையாகிறது.கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மார்க்கெட்டில் கிலோ 590 நிர்ணயிக்கப்பட்டது. அதே பட்டுக்கூட்டை 722 ரூபாய்க்கு ராம் நகரில் அதே விவசாயி விற்றுள்ளார்.

    இது குறித்து ஆவணங்களை, பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். ஒரு விவசாயி ஆயிரம் கிலோ வரை பட்டுக்கூடு கொண்டு சென்றால், பல ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது. இவ்வாறு, தமிழகத்திலிருந்து ராம்நகருக்கு தற்போது நாள் தோறும் 100 டன் வரை பட்டுக்கூடு விற்பனைக்கு செல்கிறது.

    அதே போல் தமிழகத்தில் பட்டுக்கூடு வழங்கினால், உரிய தொகை வழங்க பல வாரங்கள் தாமதமாகிறது. ஆனால் கர்நாடகா மையங்களில் சில மணி நேரங்களில், விவசாயிகள் வங்கிக்கணக்கில் தொகை வரவு வைக்கப்படுகிறது.இதனால் இப்பகுதிகளிலுள்ள விவசாயிகள் தற்போது ஒருங்கிணைந்து லாரிகளை வாடகைக்கு ஏற்பாடு செய்து வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    கோலார், ராம்நகர் மட்டுமல்லாது திருநெல்வேலி பகுதியிலிருந்து ஆந்திரா மாநிலம் என அண்டை மாநிலங்களுக்கு உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள் 75 சதவீதம் அருகிலுள்ள மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் சூழல் உள்ளது. தூரம் அதிகரித்தாலும், ஒவ்வொரு விவசாயிகளுக்கும் கொண்டு செல்லும் பட்டுக்கூடுகளுக்கு ஏற்ப பல ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது.

    பட்டுக்கூடு வெளி மாநிலங்களுக்குச்செல்வதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கும் 'செஸ்' வரியும் இழப்பு ஏற்படுகிறது.நூல் விலை உயர்ந்துள்ள நிலையில், நூல் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சிண்டிகேட் அமைக்காமல் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும்.

    வெளி மாநில மார்க்கெட் நிலவரம், உற்பத்தி செலவினத்தை கருத்தில் கொண்டு தமிழக பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள் விலை நிர்ணயம் செய்யவும் கொள்முதல் செய்யப்படும் பட்டுக்கூடுக்கு உடனடியாக தொகை வழங்கவும் நடவடிக்கை எடுத்தால் தமிழக பட்டுக்கூடு மார்க்கெட்களுக்கும் வரத்து அதிகரிக்கும்.விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×