search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவில்வழிக்கு தொடர்ச்சியாக டவுன் பஸ்களை இயக்க கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவில்வழிக்கு தொடர்ச்சியாக டவுன் பஸ்களை இயக்க கோரிக்கை

    • சாலைப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
    • அரசு நிலத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடவசதி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து நகர அளவிலான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். திருப்–பூர் பழைய பஸ் நிலையம் முன் தினசரி மார்க்கெட்டில் பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகள் ஒதுக்க வேண்டும். மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு இல்லாமல் கடைகளை ஏலம் விட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நேரில் ஆய்வு செய்யப்படும் என்று சுப்பராயன் எம்.பி. கூறினார்.

    கலெக்டர் வினீத் பேசும்போது, கோடைகாலத்தில் குடிநீர் வினியோக தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தக்கூடாது என்றார்.மேயர் தினேஷ்குமார் பேசும்போது, 4-வது குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது மின்மோட்டார்களை இயக்குவதில் மின்சார கட்டண செலவு அதிகாரிக்கும். இதற்காக மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தார்.

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில்வழியில் இருந்து தென்மாவட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையங்களுக்கு இடையே டவுன் பஸ்களை தொடர்ச்சியாக இயக்க வேண்டும். கோவில்வழி பஸ் நிலைய பணிகள் தொடங்கும்போது அருகில் உள்ள அரசு நிலத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடவசதி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×