search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாக்கடை கழிவுநீரை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து திருமுருகன்பூண்டியில் பொதுமக்கள் போராட்டம்
    X

    நகராட்சி தலைவர் குமார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி. 

    சாக்கடை கழிவுநீரை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து திருமுருகன்பூண்டியில் பொதுமக்கள் போராட்டம்

    • 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • டைட்டல் பார்க் அமைப்பதற்காக பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி 3-வது வார்டில் குடியிருப்புகள் நடுவில் சாக்கடை கழிவுநீரை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலுக்கு முயற்சி செய்த பொதுமக்களிடம் நகராட்சி தலைவர் குமார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட வி.ஜி.வி. ஸ்ரீ கார்டனில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் அதே பகுதியில் டைட்டல் பார்க் அமைப்பதற்காக பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

    இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் டைட்டல் பார்க் கட்டுமான பணியின் போது வெளியேறும் கழிவுநீர் அனைத்தையும் வி.ஜி.வி. ஸ்ரீகார்டன் வழியாக செல்லும் வகையில் புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அணைபுதூர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புதிய அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள பாறைக்குழியில் தேங்கி வருகிறது. தற்போது ஒட்டு மொத்த கழிவுநீரும் வி.ஜி.வி. ஸ்ரீகார்டன் வழியாக செல்வதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று கூறியும், குடியிருப்புகள் வழியாக கழிவுநீரை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வி.ஜி.வி. ஸ்ரீ கார்டன் குடியிருப்போர் சங்க தலைவர் கிறிஸ்டோபர், செயலாளர் பத்மநாபன், மத்திய அரசின் நலஉதவி பிரிவின் பா.ஜ.க. திருமுருகன்பூண்டி மண்டல் தலைவர் தரணிபதி ஆகியோர் தலைமையில் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலைமறியல் செய்வதற்காக அந்த பகுதியில் திரண்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணலாம் என்றும், மறியலில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறினார். இதனால் மறியல் முயற்சியை பொதுமக்கள் கைவிட்டனர். மேலும் உடடினயாக அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து நகராட்சி தலைவர் குமார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது குடியிருப்புகள் மத்தியில் சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீரை கொண்டு சென்றால் சுகாதார சீர்கேடு ஏற்படும் , பாதாள சாக்கடை அமைத்து அதன் வழியாக கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நகராட்சி தலைவர் குமார், சாக்கடை கால்வாயை விரிவுப்படுத்தி கழிவுநீர் எளிதாக செல்லும் வகையிலும், கால்வாயின் மேற்பகுதியை முற்றிலுமாக மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். பின்னர் கால்வாயை அகலப்படுத்துவதற்காக அளவெடுக்கும் பணியும் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×