search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கலூர் ஒன்றியத்திற்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும் -  கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    X

    கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 

    பொங்கலூர் ஒன்றியத்திற்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும் - கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    • ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் பொங்கலூர் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார். ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    பழனிசாமி (மாவட்ட கவுன்சிலர்): அலகுமலையில் 4 ஊராட்சிகளுக்கு மேல் உள்ள ஆதிதிராவிட பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சமுதாய நலக்கூடம் கடந்த 2 வருடங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செட்டிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாமல் உள்ளது. அதனையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜோதிபாசு (இந்திய கம்யூனிஸ்டு): குப்பிச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அத்திக்கடவு குடிநீர் முறையாக வருவதில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் இதுகுறித்து பேசப்படுகிறது. ஆனால் ஒரு தீர்வு என்பது கிடைப்பதில்லை. வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வக்கீல் எஸ்.குமார் (ஒன்றிய குழு தலைவர்): வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பு பகுதியை எடுப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து 2 முறை கடிதம் கொடுத்தாகிவிட்டது. இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்திக்கடவு குடிநீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. நமது பொங்கலூர் பகுதிக்கு வழங்க வேண்டிய குடிநீரை முழுமையாக வழங்கினாலே அதற்கு ஒரு தீர்வு ஏற்படும். விரைவில் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி ஒரு நல்ல தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய நிர்வாகமும், கிராம ஊராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நாம் நல்லதை செய்ய முடியும். ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் இருந்தாலும் பெரும்பாலும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் மக்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்த பாகுபாடும் பார்ப்பதே கிடையாது.

    ஒன்றிய குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்ட வேலைகள் அனைத்தும் உடனுக்குடன் செய்து தரப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்படவுள்ள ஒன்றிய அலுவலகத்திற்கான பூமி பூஜை விரைவில் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார். முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி மகேஸ்வரன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பாலுசாமி, லோகு பிரசாந்த், சுப்பிரமணி, பிரியா புருஷோத்தமன், மலர்விழி ராமசாமி, மோகனப்பிரியா, குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×