search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலால் அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்
    X

    கோப்புபடம்.

    குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலால் அதிகரிக்கும் போக்சோ வழக்குகள்

    • ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை முறையாகவும், விரைவாகவும் விசாரிக்க வேண்டும்.

    தாராபுரம் :

    குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புகார்களின் எண்ணிக்கையும்அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பது தான் போக்சோ சட்டம். குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான பேச்சு, செயல்பாடு, பார்வை என அனைத்துமே பாலியல் துன்புறுத்தல்தான்.

    குழந்தைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, குழந்தை மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் கடும் குற்றமாக பார்க்கப்படுகிறது. அது பெற்றோர், உறவினர், ஆசிரியர், மருத்துவர், காவலர் என அனைவருக்கும் பொருந்தும்.போக்சோ சட்டம் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் இரு பாலினருக்கும் பொருந்தும். திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குறித்தான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய நபர்கள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்.

    பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை முறையாகவும், விரைவாகவும் விசாரிக்க வேண்டும். வழக்கு பதிவு செய்ய தாமதம் கூடாது என போலீஸ் உயர் அதிகாரிகள் போலீசாருக்கு தகுந்த அறிவுரை வழங்கி வருகின்றனர். கணவன், மனைவி பிரிந்த நிலையில் கவனிக்க, வளர்க்க ஆளில்லாத சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் மீது பாலியல் அத்துமீறல் அதிகரித்து வருகிறது.பெரும்பாலான வழக்குகளில் இரண்டாவது தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர்.

    குழந்தை வன்முறை குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியுள்ளதாவது :- குழந்தைகளை தவறான வார்த்தைகளால் பேசுதல், குழந்தைகளை பாதிக்கும் கேலி, கிண்டல் செய்தல், ஆபாச படங்கள் காண்பிப்பது, பேசுவது, குழந்தை விரும்பத்தகாதவாறு உடல் பாகங்களை தொடுதல், குழந்தையின் தன்னம்பிக்கையை இழக்க செய்தல், தன் கோபத்தை தணிக்க குழந்தை மீது தீங்கிழைத்தல், குழந்தையை தன் வயப்படுத்தல், வேலையாளாக பயன்படுத்துவது, கருத்துக்கு செவி சாய்க்காமல் இருப்பது, உணர்வுகளை புறக்கணித்தல், பள்ளியில் உடல் ரீதியான தண்டனைக்கு உள்ளாக்குவது, மருத்துவ தேவைகளை புறக்கணித்தல், கல்வியின் அவசியத்தை புறக்கணித்தல், கண்காணிப்பு இல்லாமல் விட்டு விடுதல் ஆகியவை குழந்தை வன்முறை என வரையறுக்கப்பட்டுள்ளது.

    மேலும் போலீசார் கூறுகையில், ப்ராஜக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் படி தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு சென்று போக்சோ சட்டம் குறித்தும், அது தொடர்பான விழிப்புணர்வு குறித்தும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் விழிப்புணர்வு ஏற்பட்டு இது தொடர்பான புகார்கள் அதிகம் வருகின்றன. அதை உடனடியாக பதிவு செய்து, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு குழந்தைகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. போக்சோ உதவி பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன என்றனர்.

    Next Story
    ×