என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    நொச்சிப்பாளையம் பிரிவில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள். 

    திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

    • அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
    • நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன. கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதாலும் சரக்கு போக்குவரத்து பிரதானமாக இருப்பதாலும் இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றன.

    போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன.

    மேலும் பல்லடம் சாலை வழியாக தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

    இது குறித்து வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது:- வீரபாண்டி பிரிவு ,நொச்சிப்பாளையம் பிரிவு,டி.கே.டி.மில் பிரிவு என முக்கிய சாலைகள் செல்லும் சந்திப்புகள் இந்த சாலையில் உள்ளது. மேற்கூறிய இடங்களில் அதிகப்படியான வாகன போக்குவரத்து இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளன.

    குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பிரிவு இந்த இரண்டு நால்ரோடுகளிலும் பெரும்பாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருப்பதில்லை.

    இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

    நெரிசலில் சிக்கிய வாகனங்கள் தினந்தோறும் ஊர்ந்து செல்வதால் கடும் மன உளைச்சல் ஏற்படுகின்றன. மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தினந்தோறும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவியாய் தவிக்கின்றன.

    மேற்கூறியுள்ள இரண்டு பகுதிகளிலும் உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    Next Story
    ×