search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் முழுவதும் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை -   மாவட்டத்தில் 504 மில்லி மீட்டர் மழை பதிவு
    X

    ரயில்வே பாலத்தில் மழைநீருடன் சாக்கடை கழிவுகள் கலந்து சாலையில் செல்வதை காணலாம். 

    திருப்பூர் முழுவதும் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை - மாவட்டத்தில் 504 மில்லி மீட்டர் மழை பதிவு

    • திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள டி.எம்.எப் பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • இரண்டு மணி நேரம் பெய்த தொடர் மழையால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பூரில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6மணி முதல் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை லேசாக பெய்து நின்றது. பின்னர் இரவு10 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் கொட்டிதீர்த்த கன மழையால் திருப்பூர் அவினாசி ரோடு, பி.என்.ரோடு, ஊத்துக்குளி ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, காங்கயம் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர். திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள டி.எம்.எப் பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    அதேபோல் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒத்தக்கல் பாலம், கல்லூரி சாலையில் உள்ள பாலங்களில் மழைநீர் அதிக அளவு சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இரண்டு மணி நேரம் பெய்த தொடர் மழையால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காகதோண்டப்பட்ட இடங்களில் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.இதேபோல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்த கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு 46 மில்லி மீட்டர், அவிநாசி 37 மில்லி மீட்டர், பல்லடம் 29 மில்லி மீட்டர், ஊத்துக்குளி 11 மில்லி மீட்டர், காங்கேயம் 43 மில்லி மீட்டர், தாராபுரம் 27 மில்லி மீட்டர், மூலனூர் 11 மில்லி மீட்டர், குண்டடம் 55 மில்லி மீட்டர், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் 52 மில்லி மீட்டர், திருப்பூர் தெற்கு 68 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 504 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    Next Story
    ×