search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடுவாய் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்  - கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
    X
    கோப்புபடம். 

    இடுவாய் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் - கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

    • வார்டு உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் கலந்து கொண்டனர்.
    • அனைவரும் கிராமத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் உறுதிமொழி ஏற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள சீரங்ககவுண்டன் பாளையத்தில் உள்ள அரசமர மைதானத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பரமசிவம் , வார்டு உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணி குழு சார்பாக வக்கீல் ராஜசேகரன் , கிராம நிர்வாக அலுவலர் , விவசாயத்துறை சுகாதாரத் துறை அதிகாரிகளும் உள்ளாட்சி அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் இடுவாய் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியோடு இணைத்தால் தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை இழப்பும் பொருளாதார பாதிப்பும் ஏற்படும் என்ற காரணத்தாலும், உள்ளாட்சிப் பணிகள் விரைந்து நடைபெறுவதில் தாமதம் ஏற்படும் என்கிற காரணத்தாலும் இடுவாய் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியோடு இணைக்க கூடாது .

    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமும் ஒன்றிய அரசும் இணைந்து வழங்கி வந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மானியத்தில் வீடு கட்டும் திட்டம் (இரண்டு லட்சத்து 10 ஆயிரம் மானியம் ) கடந்த ஓராண்டாக செயல்படுவதில்லை. எனவே உடனடியாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட 12 மணி நேரம் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்ற சட்ட திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொழிலாளர் தினமான மே தினத்தன்று முதலமைச்சர் அந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற்றதற்கு இந்த கிராம சபை மூலம் ஏகமனதாக அவருக்கு நன்றி தெரிவிப்பது.

    இடுவாயில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கடந்த பல வருடங்களாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் போராட்டம் நடத்தியும் கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த அரசு மதுபான கடையில் மது விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது மதுபான கடை அகற்றாததால் ஊராட்சி தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் கருத்து தெரிவித்தனர்.

    ஊராட்சித் தலைவர் அதற்கு விளக்கம் அளித்து பேசும் போது, மதுபான கடையை வைக்கலாமா வேண்டாமா என்ற அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு இல்லை . ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவித்து போராட மட்டுமே அதிகாரம் உள்ளது. அதை இடைவிடாது செய்து வருவதாக விளக்கம் அளித்தார்.பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொது மக்களின் கோரிக்கை மனுக்களை ஊராட்சி தலைவர் பெற்றுக் கொண்டார். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.அனைவரும் கிராமத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் உறுதிமொழி ஏற்றனர்.

    Next Story
    ×