search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்ந்து பலியாகும் இலவச ஆடுகள் - பயனாளிகள் அதிர்ச்சி
    X

    கோப்புபடம். 

    தொடர்ந்து பலியாகும் இலவச ஆடுகள் - பயனாளிகள் அதிர்ச்சி

    • 5 ஆடுகள் வழங்கப்பட்ட நிலையில் அனைத்து ஆடுகளும் இறந்துள்ளன.
    • ஆடுகள் வாங்கும்போது விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5 ஆடுகள் வாங்க ஒரு ஆட்டுக்கு ரூ. 3,500 வீதம் 17 ஆயிரத்து 300 ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 பயனாளிகளுக்கு ஆடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் அவிநாசி வடுகபாளையம், சின்னேரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு சமீபத்தில் ஆடுகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட ஆடுகள் தரமற்று இருப்பதாகவும், ஒரு ஆட்டின் விலை 1,000 முதல் 1,500 ரூபாய் வரை தான் தேறும் எனவும் பயனாளிகள் கூறினர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், ஒவ்வொரு வட்டார அளவிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்த வியாபாரிகள் மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது. மொத்த வியாபாரிகளால் கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியாக இல்லாவிட்டால், வேறு ஆடுகளை எடுத்து வரச்சொல்லி வாங்கிக் கொள்ளலாம். ஆடுகளை தேர்வு செய்வது பயனாளிகள் தான். பயனாளிகள் விருப்பப்பட்டால் சந்தைக்கு சென்றும் கூட ஆடுகளை வாங்கிக்கொள்ளலாம் என்றனர்.

    இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    அரசின் ஆடு வழங்கும் திட்டத்தில் முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு வட்டார அளவில் உள்ள கால்நடை மருத்துவர் கணக்கிலும், அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு விடும். பயனாளிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட சந்தைக்கு சென்று, விரும்பிய ஆடுகளை வாங்கி கொள்ளலாம். அதற்கான தொகையை கால்நடை மருத்துவர்கள் விடுவித்து விடுவர்.தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு பொதுவாக ஒரு மொத்த வியாபாரி மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது.

    அவ்வாறு கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்ற புகாரும் வருகிறது.விவசாயிகளே நேரடியாக சந்தைக்கு சென்று ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறினாலும் அதற்கான தொகையை விடுவிப்பதில், துறை ரீதியாக நடைமுறை சிக்கல் உள்ளது.எனவே, பழைய நடைமுறைப்படி, அந்தந்த வட்டார கால்நடை மருத்துவர்கள் மூலம் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கால்நடை வளர்ப்போர் சிலர் கூறியதாவது:-

    அரசால் வழங்கப்பட்ட கால்நடைகளின் உண்மையான சந்தை மதிப்பை கால்நடை பராமரிப்பு துறையினரிடம் இருந்து பெற்று வரும்படி, இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.ஆனால் எங்கிருந்தோ ஒரு வியாபாரியிடமிருந்து வாங்கப்படும் கால்நடைகளுக்கு, சந்தை மதிப்பை நிர்ணயித்து கொடுக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் தயாராக இல்லை. இதனால், அவை இறந்தால் இன்சூரன்ஸ் தொகையும் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட வாளியூர் பகுதியில் வசிக்கும் பயனாளிக்கு வழங்கப்பட்ட 5 ஆடுகளில் 2 ஆடுகள் இறந்தன. மற்ற 3 ஆடுகள் உணவு உட்கொள்ளாமல் ஆபத்தான நிலையில் உள்ளதாக பயனாளிகள் தெரிவித்தனர்.

    ஈசக்கண்ணன்புதூர் பகுதியில் ஒரு பயனாளிக்கு 5 ஆடுகள் வழங்கப்பட்ட நிலையில் அனைத்து ஆடுகளும் இறந்துள்ளன. இதனால் பயனாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    எனவே ஆடுகள் வாங்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்கின்றனர்விவசாயிகள்.ஆடு நோஞ்சானாக காணப்பட்டால் விலை குறைவாக போகும். இதனை தவிர்க்க சில வியாபாரிகள் ஆடுகளை சந்தைக்கு கொண்டு செல்வதற்கு முன் லிட்டர் கணக்கில் வாயில் தண்ணீரை ஊற்றுகின்றனர். இதனால் ஆடுகள் வயிறு பெருத்து எடை அதிகமாக காணப்படும்.

    ஆடு வாங்குபவர் ஆடுகள் நல்ல எடையுடன் திடகாத்திரமாக இருப்பதாக நம்பி அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்று விடுவர். கசாப்பு கடைக்காரர்கள் வாங்கியவுடன் ஆடுகளை உடனடியாக அறுத்து விடுகின்றனர்.தற்போது, அரசின் இலவச திட்டத்தில் ஆடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை வாங்குவதற்கு, அலுவலர்கள் சந்தைக்கு சென்று ஆடுகளை வாங்கி அவற்றை பயனாளிகளுக்கு வழங்குகின்றனர்.

    இது குறித்து பொங்கலூர் வட்டார விவசாயிகள் சிலர் கூறியதாவது:சில வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வரும் முன் பல லிட்டர் தண்ணீரை வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றுகின்றனர். அவை குடிக்க முடியாமல் முரண்டு பிடிக்கும். இருந்தாலும் நாக்கை இழுத்து பிடித்து தண்ணீரை ஊற்றுவர். தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே.

    வரும் வழியில் ரோட்டோரங்களில் சாக்கடையில் கிடைக்கும் நீரைக்கூட சிலர் ஊற்றி விடுவதுண்டு. இந்த ஆடுகளுக்கு சில நாட்கள் வயிற்றில் போகும். சரியாக தீவனம் எடுக்க முடியாது.உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் ஆடுகள் இறந்து விட நேரிடுகிறது. ஆடுகள் இறக்க இதுவும் முக்கிய காரணம். ஆடுகள் வாங்கும்போது விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றனர்.

    திருப்பூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் பரிமள ராஜ்குமார் கூறுகையில், ஆடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இறக்கும் ஆடுகளுக்குரிய இழப்பீடு தொகை பயனாளிகளுக்கு பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×