search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பயிற்சி
    X

    கோப்புபடம். 

    வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பயிற்சி

    • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் திருப்பூரில் கல்வியை தொடர மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர் அதிகம் உள்ளனர்.

    திருப்பூர்:

    வேலை வாய்ப்புக்காக பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா என பல்வேறு வெளிமாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் திருப்பூருக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் திருப்பூரில் கல்வியை தொடர மிகவும் சிரமப்படுகின்றனர்.

    தமிழ் மொழி தெரியாததால் பல குழந்தைகள் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர். இதனால், அவர்களுக்கு தமிழ் மொழி கற்போம் திட்டத்தில் இணைத்து தமிழ் கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை துணை இயக்குனர் சந்தோஷ், உதவி இயக்குனர் சேதுபதி ஆகியோர் பேசினர். பின்னலாடை உற்பத்தி உள்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இது குறித்து தொழிலக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர் அதிகம் உள்ளனர். தமிழ் தெரியாததால் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிடுகின்றனர். சிலர் குழந்தை தொழிலாளராகிவிடுகின்றனர்.

    தமிழ் மொழி கற்போம் திட்டத்தில் வெளிமாநில குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழி வாயிலாகவே தமிழ் கற்றுக்கொடுக்கப்படும். இதற்காக தமிழ் மொழியோடு இந்தி, ஒடியா என 2 மொழித்திறனுள்ளோர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவர்.

    தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர், அவர்களது குழந்தைகளின் கல்வி நிலை குறித்த விவரங்களை அளிக்க, மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மொழி கற்பதன்மூலம் வெளிமாநில தொழிலாளர் குழந்தைகள் இடை நிற்றல் தவிர்க்கப்படும் என்றனர்.

    Next Story
    ×