search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளபாளையம் வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில்   பயனாளிகளுக்கு ரூ.48.13 லட்சம் மதிப்பில் கடன் உதவி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
    X
    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடன் உதவி வழங்கிய காட்சி.

    பள்ளபாளையம் வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.48.13 லட்சம் மதிப்பில் கடன் உதவி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

    • தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட த்தின் கீழ் 509 நபர்களுக்கு ரூ.548.87 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • கூட்டுறவு சார்பதிவாளர் சித்ரா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், பள்ளபாளையம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூட்டுறவு எண்ணெய் ஆலையை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து, 60பயனாளிகளுக்கு ரூ.48.13 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒரு நீண்ட பாரம்பரியத்திற்கு உரியது. விவசாய பெருங்குடி மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. மேலும் எண்ணெய் ஆலை மட்டுமில்லாமல் தொழிற்சாலை நடத்தக்கூடிய அளவில் வளர வேண்டும் என எனது வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    விவசாயத்தை மேற்கொள்ளும் அளவுக்கு இந்த சங்கம் வளர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.அரசு நடத்தக்கூடிய சங்கத்தின் மூலமாக பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய கடலை பருப்புகளை கொள்முதல் செய்து அரைத்து சுத்தமான எண்ணெய் எடுத்துவெளிபகுதி மக்களை கவரக்கூடிய வகையில் வளர்ந்து இருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு கடன் உதவிகள் வழங்கும் வகையிலும் இணைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட த்தின் கீழ் 509 நபர்களுக்கு ரூ.548.87 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் நகைக்கடன்தள்ளுபடி திட்டத்தின் கீழ் 394 நபர்களுக்கு ரூ.190.56 லட்சம் நகைக்கடன் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் 8 குழுக்களுக்கு 80 நபர்களுக்கு ரூ.4.68 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு கடன்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.

    தொடர்ந்து, 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 மதிப்பீட்டில் கடனுதவியையும், 29 நபர்களுக்கு ரூ.34.13 லட்சம் மதிப்பீட்டில் கே.சி.சி பயிர் கடனுதவிகளையும், 6நபர்களுக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளையும் என மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.48.13 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    விழாவில் துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) கந்தசாமி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், கூட்டுறவு சார்பதிவாளர் சித்ரா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×