search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 வகை பாம்புகள் கொடிய விஷமிக்கவை - பல்லடம் கருத்தரங்கில் தகவல்
    X
    கருத்தரங்கில் பங்கேற்றவர்கள். 

    4 வகை பாம்புகள் கொடிய விஷமிக்கவை - பல்லடம் கருத்தரங்கில் தகவல்

    • நிர்வாகிகள் பூபதி, பகவதி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • கோடங்கிபாளையம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் லலிதாம்பிகை செல்வராஜ் தலைமை வகித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை மகிழ்வனம் பூங்காவில் பாம்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கோடங்கிபாளையம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் லலிதாம்பிகை செல்வராஜ் தலைமை வகித்தார். மகிழ்வனம் பூங்கா செயலாளர் சோமு என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் மழைக்காடுகள் ஆராய்ச்சியாளர் மாணிக்கம், இயற்கை ஆர்வலர் ரத்னசபாபதி,கலங்கல் வனம் ஒருங்கிணைப்பாளர் பாபு, மகிழ்வனம் நிர்வாகிகள் பூபதி, பகவதி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சென்னை பாம்பு பூங்கா இணை இயக்குநர் மருத்துவர் அறிவழகன் பேசுகையில்,இந்தியாவில் பலவேறு வகையான பாம்புகள் இருந்தாலும் அவை குளிர்பிரதேசங்கள் வாழ்விடத்தை அமைத்து கொள்வது இல்லை. மித வெப்ப பிரதேசங்களில் தான் அவை வாழும். பாம்பு தானாக யாரையும் தீண்டாது. தன்னை மற்றவர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளவே பாம்பு தீண்டும். நல்லபாம்பு, கண்ணாடிவிரியன், கட்டுவிரியன், சுரட்டை விரியன் ஆகிய 4 வகை பாம்புகள் மட்டுமே கொடிய விஷம் உடையவை. இவை தான் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது. பாம்பு கடித்தால் உடலில் வேர்க்கும், படபடக்கும், தாகம் ஏற்படும். அதற்காக நாம் அச்சப்பட தேவையில்லை.

    எந்த முதலுதவி சிகிச்சையும் அளிக்காமல் உடனே அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி விடுவார்கள். எந்த பாம்பு கடித்தது என்று காண்பிக்க பாம்பை அடிக்கும் வேலையில் ஈடுபட வேண்டியது இல்லை. கண்ணாடி விரியன், மண்ணுளி பாம்பு போன்றவை குட்டிகளை நேரடியாக ஈனும், மற்றவை முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும். முன்பு 4 வகையான பாம்பு கடி மருந்து தனித்தனியாக இருந்தது. தற்போது பாம்புக்கடிக்கு என்று ஒரே மருந்து பவுடர் வடிவில் வந்து விட்டது.

    எந்த பாம்பு கடித்தாலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவர்கள் விஷம் உள்ள பாம்பு கடித்ததா இல்லையா என்பதை மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடித்து விடுவார்கள். நாம் அதற்காக எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டியது இல்லை. 4 வகை பாம்புகளில் குட்டி பாம்பு கடித்தாலும் அதில் விஷம் உள்ளது. தண்ணீர் பாம்பு, பச்சை பாம்பு போன்றவை தான் விஷம் இல்லாதவை. மேலும் கடல், ஆறுகளில் பாம்பு கடித்தாலும் அதிலும் விஷம் உள்ளது. தட்ப வெப்ப சூழ்நிலை காரணமாக ஊட்டி,கொடைக்கானல் போன்ற பகுதிகளில் பாம்புகள் அதிகம் வசிக்காது. வன விலங்குகள் பாதுகாப்பு தடுப்பு சட்டத்தின்படி பாம்புகளை கொல்வது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×