search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி சர்க்கரை ஆலையில் நவீனமயமாகும் எந்திரங்கள் - 1 லட்சம் டன் கரும்பு  அரைக்க திட்டம்
    X

    கோப்புபடம்.

    அமராவதி சர்க்கரை ஆலையில் நவீனமயமாகும் எந்திரங்கள் - 1 லட்சம் டன் கரும்பு அரைக்க திட்டம்

    • 8.7 முதல் 10 சதவீதம் வரை சர்க்கரை கட்டுமானம் உயர்த்தப்பட்டது.
    • ரூ.10 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணிகள் துவங்கி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழனி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலை அங்கத்தினர்களாக 3 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர்.அவர்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்யப்பட்டு அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தேவையான கரும்பு கிடைக்காதது, வறட்சி, உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அரவைக்கு தேவையான கரும்பு கிடைப்பதிலும், பழமையான எந்திரங்களால் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. கடந்த ஆண்டு அரவை பருவத்தில் 94 ஆயிரம் டன் கரும்பு அரவை மேற்கொள்ளப்பட்டு 88 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.

    சர்க்கரை கட்டுமானம் எனப்படும் கரும்பு பிழிதிறன், கடந்த 5 ஆண்டுகளாக 7.8 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. கடந்த ஆண்டு எந்திரங்கள் பழுது, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் 8.7 முதல் 10 சதவீதம் வரை சர்க்கரை கட்டுமானம் உயர்த்தப்பட்டது.

    பழமையான எந்திரங்களை புதுப்பிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சர்க்கரை ஆலையிலுள்ள எந்திரங்கள் நவீனப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதுவரை கிரேன் வாயிலாக கரும்பு அரவைக்கு எடுக்கப்பட்டு வந்த நிலையில் 2 கோடி ரூபாய் செலவில் நவீன முறையான ரோப் வாயிலாக வாகனங்களிலிருந்து கரும்பு அரவைக்கு எடுக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இதே போல் அரவை முதல் சர்க்கரை உற்பத்தி வரை உள்ள எந்திரங்கள் ரூ. 10 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணிகள் துவங்கி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.ஆலை நவீனப்படுத்தப்பட்டதால் சர்க்கரை ஆலையில் பிழிதிறன் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த இரு ஆண்டாக பெய்த பருவமழைகள் காரணமாக ஆலை கட்டுப்பாட்டு பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள கரும்பும் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.நடப்பாண்டு இதுவரை 2 ஆயிரம் ஏக்கரில் 80 ஆயிரம் டன் கரும்பும், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 10 ஆயிரம் டன் கரும்பு மற்றும் பதிவு செய்யாத விவசாயிகளிடமிருந்து கொள்முதல் என ஒரு லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டு கரும்பு அரவை பணிகளை ஏப்ரல் 21-ந் தேதி துவக்க திட்டமிட்டு ஆலை புனரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலை அரவை துவக்குவதற்கு முதற்கட்டமாக ஆலையிலுள்ள பாய்லர்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா வருகிற 10-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஆலைக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.இதில் விவசாயிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் பங்கேற்குமாறு மேலாண் இயக்குனர் சண்முக நாதன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×