search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் இடைவிடாது இடியுடன் கொட்டி தீர்த்த கோடை மழை
    X

    திருப்பூரில் இடைவிடாது இடியுடன் கொட்டி தீர்த்த கோடை மழை

    • கடந்த வாரம் முதல் அவ்வப்போது மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
    • பலத்த மழையின் காரணமாக அந்த பகுதியில் மின்னல் தாக்கியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தார்கள். தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இதனால் மதிய நேரங்களில் வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் முதல் அவ்வப்போது மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே நேற்று காலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக பல இடங்களில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவின் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு பகுதியில் 52 மி. மீட்டர், குமார் நகரில் 60 மி.மீ, திருப்பூர் தெற்கு பகுதியில் 9 மி.மீ, பல்லடம் ரோட்டில் 27 மி.மீ, அவிநாசியில் 11 மி.மீ, ஊத்துக்குளியில் 13.90 மி.மீ, பல்லடத்தில் 4 மி.மீ, தாராபுரத்தில் 9 மி.மீ, மூலனூரில் 38 மி. மீ, குண்டடத்தில் 7 மி.மீ, உப்பாறு அணையில் 13 மி.மீ, நல்லதங்காள் ஓடையில் 25 மி.மீ, காங்கயத்தில் 23 மி. மீ, வெள்ள கோவிலில் 18 மி.மீ, வட்டமலை கடைஓடையில் 33.60 மி.மீ, அமராவதி அணை பகுதியில் 3 மி.மீ, திருமூர்த்தி அணை பகுதியில் 8 மி. மீ, மடத்துக்குளத்தில் 3 மி. மீ என மொத்தம் 364.50 மில்லி மீட்டர் மழை மாவட்டம் முழுவதும் பதிவானது. இதன் சராசரி 18.23 சதவீதம் ஆகும்.


    இதற்கிடையே அவிநாசி அருகே உள்ள பொன்னேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 75) என்ற விவசாயி தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் மழையின் காரணமாக கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்திருந்தார். பலத்த மழையின் காரணமாக அந்த பகுதியில் மின்னல் தாக்கியது. அப்போது 2 சினை மாடு உட்பட 3 பசுக்கள் மீது மின்னல் தாக்கியதில் அவைகள் உயிரிழந்தன.

    உயிரிழந்த பசுக்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதே போல் திருப்பூர் மும்மூர்த்தி நகர், பிரிட்ஜ்வே காலனி, பிச்சம்பாளையம் ஆகிய பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் அருகில் உள்ள பள்ளிகள், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×