search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்

    தக்காளியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

    • தக்காளியை கொள்முதல் செய்து மானிய விலையில் கிலோ 60 ரூபாய்க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்தது.
    • தக்காளி 10 ரூபாய்க்கு விற்று விவசாயிகள் நஷ்டம் அடையும்போது சமூகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

    பல்லடம்:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த நான்கு மாதங்களாக எல்லா தரப்பிலும் உச்சரிக்கப்பட்ட பெயர் தக்காளி. தக்காளியின் விலை உயர்ந்து கிலோ 100 ரூபாய் தாண்டி விற்பனையாகியது, ஆனால் விவசாயிகளிடம் தக்காளி இல்லை.ஒரு சில விவசாயிகள் மட்டுமே அதனால் பயன் பெற்றனர்.

    தக்காளி விலை உயர்ந்த போது பொதுமக்களும், அரசியல்வாதிகளும் தக்காளி விலை உயர்ந்ததால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்று தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு மகாராஷ்டிராவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும், மத்திய பிரதேசத்திலிருந்தும் தக்காளியை கொள்முதல் செய்து மானிய விலையில் கிலோ 60 ரூபாய்க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்தது.

    பொதுமக்களை காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது தக்காளி விளைவித்த விவசாயிகள் கிலோ ரூபாய் 10க்கு விற்பதால் மிகக் கடுமையாக நஷ்டத்தில் உள்ளார்கள். விவசாயிகள் நஷ்டப்படும் போது மத்திய,மாநில அரசுகள் தக்காளியை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    தக்காளியை மட்டுமல்ல அனைத்து விவசாய பொருட்களுக்குமான இந்த கோரிக்கை தொடர்ச்சியை நிறைவேற்றப்படாமல் இருந்து கொண்டே இருக்கிறது. தக்காளி 100 ரூபாய்க்கு விற்ற போது கவலைப்பட்ட சமூகம் தக்காளி 10 ரூபாய்க்கு விற்று விவசாயிகள் நஷ்டம் அடையும்போது இந்த சமூகம் கண்டு கொள்ளாமல் இருப்பது விவசாயிகளுக்கு கடுமையான வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    பொதுமக்களுக்கு மானிய விலையில் தக்காளியை விற்பனை செய்து கொடுக்கும் அரசு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து தக்காளியை கொள்முதல் செய்யாமல் இருப்பது இரட்டை நிலைப்பாடாக உள்ளது.விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.தற்போது விவசாயிகள் கடுமையான நஷ்டத்தில் உள்ளார்கள்.

    எனவே தமிழ்நாடு அரசு தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ரூ.20 விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்து, மக்களுக்கு விநியோகம் செய்து, விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்வது என்பது தெரிந்தே தற்கொலை செய்வதற்கு சமமானது. ஏனென்றால் விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருளுக்கு, அவர்கள் விலை நிர்ணயம் செய்ய முடியாது. தக்காளியோ, வெங்காயமோ, விலை உயர்ந்தால் உடனே மத்திய, மாநில அரசுகள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விலை உயராமல் கட்டுப்படுத்துகின்றன.

    தக்காளி விலை உயர்ந்து விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் நியாயமான விலை கிடைத்த போது அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் என அத்தனை பேரும் குடி முழுகி போய்விட்டதாக, குதித்தார்கள். அதே தக்காளியின் விலை இன்று அதல பாதாளத்தில் உள்ளது. இன்று அதே அரசும், அமைச்சர்களும் எங்கே போனார்கள்.

    தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்த போது வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி கூட்டுறவுத்துறை மற்றும் ரேசன் கடைகளில் நியாயமான விலைக்கு தக்காளி விற்ற அரசு, இன்று விவசாயிகளிடம் அதே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்து ஏன் ரேசன் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது.

    நுகர்வோர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும் அரசு, விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க கூடாதா. தக்காளி, தேங்காய், வெங்காயம் போன்ற விளை பொருட்கள் சீரான விலையில் விற்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசுக்கு நுகர்வோரை காப்பாற்றுவதில் உள்ள அக்கறை, விவசாயிகள் மீது துளி கூட இல்லை என்பதை இது காட்டுகிறது.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை உழவர் உழைப்பாளர் கட்சி வரவேற்கிறது. காரணம் ஜாதி, மத வேறுபாடுகள் களையப்படும். எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வு மேலோங்கும், உதாரணமாக ஒரு ஊரில் பல சாதியினர் இருப்பார்கள். ஆனால் வெளியில் செல்லும்போது நான் இந்த ஊர்காரன் என்று தான் சொல்வார்கள்.

    இந்த சாதிக்காரன் என்று சொல்ல மாட்டார்கள். அது போல் இனி தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா என்று சொல்லாமல் இந்தியா என்ற எண்ணம் மேல் ஓங்குவதற்கு இது வழிவகுக்கும். இதனால் இந்தியா மென்மேலும் வளர்ச்சியடையும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×