search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய் பருப்பு-எண்ணெய் விலை சரிவால் விவசாயிகள் கவலை
    X

    கோப்புபடம்

    தேங்காய் பருப்பு-எண்ணெய் விலை சரிவால் விவசாயிகள் கவலை

    • நீர் நிர்வாகத்தை மேற்கொள்ள சொட்டு நீர் பாசனம் மூலமும் தென்னை சாகுபடி நடைபெறுகிறது.
    • திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் என ஆண்டுக்கு 51.59 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகிறது.

    திருப்பூர்:

    கடந்த 3 மாதங்களாக தேங்காய் பருப்பு மற்றும் எண்ணெய் விலை சரிந்து அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் அதே நேரத்தில் தென்னையின் உப பொருட்களான மஞ்சி, தேங்காய் தொட்டி, தேங்காய் புண்ணாக்கு விலை கணிசமாக விலை அதிகரித்து வருகிறது. கொப்பரை மற்றும் பருப்புக்கு உரிய விலை இல்லாமல் உப பொருட்கள் விலை உயர்வதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடியானது விவசாயிகளால் தனி பயிராக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்னை சாகுபடியானது பெரும்பாலும் நீர் பாசன வசதி உள்ள இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் நீர் நிர்வாகத்தை மேற்கொள்ள சொட்டு நீர் பாசனம் மூலமும் தென்னை சாகுபடி நடைபெறுகிறது.

    கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் கூடுதலான மழை பொழிவை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது. இதன் காரணமாக தேங்காய் உற்பத்தித் திறன் அதிகரித்து உள்ளது. உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக கொப்பரை மற்றும் தேங்காய் பருப்பு விலையில் சரிவும் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தை பொறுத்தவரை 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்பட்டு சந்தைகளுக்கும், கொப்பரையாகவும் பருப்பாகவும் மாற்றப்பட்டு வியாபாரிகள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் எண்ணெய் உற்பத்திக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் என ஆண்டுக்கு 51.59 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகிறது. இது மற்ற மாவட்டங்களை காட்டிலும் சற்று குறைவான உற்பத்தியாக உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தமிழக அரசின் கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. மேலும் தென்னை விவசாயிகளும் கொப்பரை மற்றும் தேங்காயினை நேரடியாக குறைந்தபட்ச ஆதார விலையில் அரசு கொள்முதல் செய்திட கோரிக்கை வைத்தனர் .

    இக்கோரிக்கையினை மாவட்ட கலெக்டர் பரிசீலனை செய்து கருத்துரு அனுப்ப பரிந்துரை செய்ததன் பேரில் தமிழ்நாடு அரசு, தென்னை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த கொப்பரையினை விலை ஆதரவு திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் NAFED வாயிலாக கொள்முதல் செய்திட அரசாணை வெளியிடப்பட்டது .

    இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை , பெதப்பம்பட்டி, பொங்கலூர் மற்றும் காங்கேயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இதன்படி நான்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் கடந்த நவம்பர் வரை 9844 விவசாயிகளிடமிருந்து 129 கோடி ரூபாய் மதிப்பிலான 12145 மெட்ரிக் டன் அரவை தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட கலெக்டர் தனது செய்திக்குறிப்பில் கூறியிருந்தார்.

    அதே நேரத்தில் இந்திய அளவில் பெரும் பகுதி தென்னை பயிரானது கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இதில் கர்நாடக மாநிலத்தில் 5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ெதன்னை பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 4200 மெட்ரிக் டன் உற்பத்தியும், தமிழகத்தில் 4.65 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டு 3,751 மெட்ரிக் டன் உற்பத்தியும், கேரள மாநிலத்தில் 7 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப் பட்டுள்ளதில் 3300 மெட்ரிக் டன் தேங்காயும் உற்பத்தி ஆகிறது.

    இந்நிலையில் கடந்த ஆண்டை விட அரவை கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்து தேங்காய் மற்றும் கொப்பரை விலை 2021 ம் ஆண்டு விலையை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் சரிந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2021ல் தேங்காய் ஒன்று 16 ரூபாய்க்கும் ஒரு கிலோ கொப்பரை 150 க்கும் விற்பனையானது. அது இந்த ஆண்டில் ஒரு கிலோ கொப்பரை 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது என கடந்த வாரம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் ஒன்றிய வேளாண்மைத்துறை செயலாளர் மனோஜ் அகஹுஜா விடம் அளித்திருந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தற்போது கொப்பரை மற்றும் தேங்காய் பருப்பு விலையுடன் எண்ணெய் விலையும் சரிவை சந்தித்து வருகிறது. இதன்படி கடந்த 15 ந்தேதி ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் அதிக பட்சமாக வரிகள் சேர்க்காமல் ரூ.123.50க்கும், குறைந்த பட்சமாக ரூ.121.50க்கும் விற்பனையானது. அதுவே இன்று அதிக பட்ச விலை 120 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 118 ரூபாய்க்கும் விலை நிர்ணயமானது.

    15 கிலோ டின் இரு வாரங்கள் முன்பு அதிகபட்சமாக வரிகள் சேர்க்காமல் ரூ.1850க்கும், குறைந்தபட்சமாக ரூ.1820க்கும் விலை நிர்ணயமானது. இன்று அதிகபட்சமாக 1800 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 1770 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் ஆகியுள்ளது.

    தேங்காய் புண்ணாக்கு 60 கிலோ மூட்டை 1570 ரூபாய்க்கும், ஒரு கிலோ 26.16 ரூபாய்க்கும் வரிகள் சேர்க்காமல் விலை நிர்ணயமானது. இதேபோல் ஆக்டிவேட்டெட் கார்பன் தயாரிக்க பயன்படும் தேங்காய் தொட்டி ஒரு டன் 200 ரூபாய் உயர்ந்து 12200 ரூபாய் என விலை போனது. எண்ணெய் விலையும், தேங்காய் பருப்பு விலையும் சரிந்து வரும் நிலையில் தேங்காய் தொட்டி விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கதுஎண்ணெய், விலை, விவசாயிகள்

    Next Story
    ×