search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டெய்னர் கட்டணம் குறைவால் ஏற்றுமதியாளர்கள் நிம்மதி
    X

    கோப்புபடம்.

    கண்டெய்னர் கட்டணம் குறைவால் ஏற்றுமதியாளர்கள் நிம்மதி

    • திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கன்டெய்னர் கட்டண உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பனியன் ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயத்த ஆடைகளை தயாரித்து கன்டெய்னர்களில் அடைத்து கப்பல் மற்றும் விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கன்டெய்னர் கட்டணம் அபரிமிதமாக உயர்ந்தது. துறைமுக ஊழியர்கள் விடுப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாகவும், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்ததாலும் கன்டெய்னர் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இதன்காரணமாக கன்டெய்னர் கட்டணமும் பலமடங்கு உயர்ந்தது. இதனால் திருப்பூரில் இருந்து ஆடைகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதிலும், வெளிநாட்டினர் இறக்குமதி செய்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது. பலமடங்கு கன்டெய்னர் கட்டண உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பனியன் ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    இந்தநிலையில் தற்போது கன்டெய்னருக்கான கட்டணம் குறைந்து வருவது ஏற்றுமதியாளர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் தென்னிந்திய துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் மேற்கு பகுதிக்கு அனுப்பி வைக்க 17 ஆயிரம் டாலர் கட்டணம் இருந்தது. தற்போது 4 ஆயிரம் டாலராக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோல் ஐரோப்பிய நாடுகளுக்கான கன்டெய்னர் கட்டணம் 9 ஆயிரம் டாலரில் இருந்து 4,500 டாலராக குறைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது பஞ்சு விலை குறைவு, நூல் விலை குறைவு காரணமாக ஏற்றுமதியாளர்களுக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ள நிலையில் சரக்குகளை அனுப்பி வைக்கும் கன்டெய்னர் கட்டணமும் குறைந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×