என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக பாதுகாப்பு குறித்து அனைத்து தொழில் அமைப்புகளுடன் கலந்தாய்வு நடத்த முடிவு
- ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இறக்குமதி நாடுகளில் பொருளாதார சிக்கன நடவடிக்கை துவங்கியுள்ளது.
- திருப்பூரை பொறுத்தவரை நூல், பஞ்சுவிலை உட்பட அனைத்து விஷயத்திலும் சாதகமான சூழல் உள்ளது.
திருப்பூர் :
கொரோனா ஊரடங்கு காலத்தில் உலகமே நிதி நெருக்கடியில் திணறிய போதும் திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பியது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இறக்குமதி நாடுகளில் பொருளாதார சிக்கன நடவடிக்கை துவங்கியுள்ளது. இதனால் ஏற்றுமதி வர்த்தகம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூரை பொறுத்தவரை நூல், பஞ்சுவிலை உட்பட அனைத்து விஷயத்திலும் சாதகமான சூழல் உள்ளது. உள்நாட்டு வர்த்தகமும் பிசியாகியுள்ளது. இருப்பினும் ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் சோர்வடைந்துள்ளன.
ஏற்றுமதி ஆடை உற்பத்தி பாதிப்பால் நூற்பாலைகளும் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சர்வதேச சந்தைகளில் நிலவும் மந்தநிலையால் ஏற்றுமதி வர்த்தகத்தில் உள்ள பாதிப்புகள், அதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், திருப்பூரின் தொழில் நிலவரம் குறித்து மத்திய, மாநில அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும்.ஏற்றுமதி ஆர்டர் பெறுவதில் நிலவும் பிரச்சினையை தெரிவித்து, தகுந்த உதவிகளை கேட்டுப்பெற வேண்டும். அதற்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து தொழில் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.






