search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் வேகமெடுக்கும் பாலப்பணிகள்
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் வேகமெடுக்கும் பாலப்பணிகள்

    • திருப்பூர் நகரப்பகுதியை நொய்யல் ஆறும், ரெயில்வே பாதையும் மூன்றாக பிரிக்கின்றன.
    • பாலம் கூடுதலாக இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.

    திருப்பூர் :

    திருப்பூர் நகரப்பகுதியை நொய்யல் ஆறும், ெரயில்வே பாதையும் மூன்றாக பிரிக்கின்றன. இதன்காரணமாக வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாலம் கூடுதலாக இருந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது நகரப்பகுதியில் வாகன நெரிசலை தீர்த்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கூலிபாளையம், அணைப்பாளையம், தோட்டத்து ப்பாளையம், எஸ்.ஆர்.சி., மில் பகுதியில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. நொய்யலிலும் புதிய பாலம் கட்டப்பட்டது.

    அணைப்பாளையம் பகுதியில் வேலம்பாளையம் ரங்கநாதபுரம் பகுதியில் இருந்து துவங்கி ெரயில்வே பாலமாகவும், நொய்யல் பாலமாகவும் நீட்டித்து மங்கலம் ரோட்டை சென்றடையும் வகையில் பெரிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. குறிப்பாக அணைப்பாளையம் கிராமம் மாநகராட்சியில் இருந்தும் தொடர்பு இல்லாத பகுதியாக இருந்து வந்தது. இந்நிலையை மாற்ற பாலம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது.

    பாலம் அமைக்கும் பணி துவங்கிய போது நிலம் எடுக்க மக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். கோர்ட்டு வழக்கு காரணமாக பாலம் பணி பாதியில் நிற்கிறது. கடந்த 2009ல் தொடங்கிய சட்ட போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நிலம் எடுப்பு விவகாரத்தில் சுமூகமாக தீர்வு கிடைத்துள்ளதால் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. கலெக்டர் கிறிஸ்துராஜ், நிலம் எடுப்பு டி.ஆர்.ஓ., பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.

    இதுகுறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:- அணைப்பாளையம் பாலம் பணி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. நிலம் எடுப்பு விவகாரம் காரணமாக இழுபறி ஏற்பட்டு வந்தது. தற்போது சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. நிலம் எடுப்புக்கான இழப்பீடு வழங்க ஒரு கோடி ரூபாய் தேவையென அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் இருந்ததால் திருத்திய திட்டமதிப்பீடு தயாரிக்க வேண்டும். திட்ட மதிப்பீடு தயாரானதும் அதற்கான நிர்வாக அனுமதியும் பெற்று புதிய டெண்டர் நடத்தி, பணிகள் விரைவில் துவங்கப்படும். ரிங்ரோடு பகுதியில், ெரயில்வே பாலமும் நொய்யல் ஆற்றுப்பாலமும் ஒரே பாலமாக அமையும் போது போக்குவரத்து நெரிசல் குறையும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, காலேஜ் ரோடு பகுதிகளில் ரெயில் பாதையை கடந்து மேம்பாலம் கட்ட திட்டமிட்டு பணிகள் நடந்தது. பல்வேறு காரணங்களால் இந்த பாலம் கட்டுமானப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பின் இதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் தற்போது எஸ்.ஆர்.சி., மில்ஸ் பாலம் கட்டுமானப் பணி முற்றிலும் நிறைவடைந்துள்ளது. பாலம் முடிவடையும் சூர்யா நகர் பகுதியில் அணுகு சாலையாக தார் ரோடு அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.

    இதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பி மண் கொட்டி சமன் செய்யும் பணி நடக்கிறது. பாலம் துவங்கும் இடத்தில் சாய்வு தளத்தில் கற்கள் பதிக்கும் பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது.பாலம் முழுவதும் இரு புறங்களிலும் தெரு விளக்குகள் அமைக்க கேபிள் இணைப்பு அளித்து விளக்கு கம்பங்கள் அமைக்கும் வகையிலும் பணி தற்போது நடக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த பின் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்படும் எனத்தெரிகிறது.

    Next Story
    ×