search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்பவானி கான்கிரீட் திட்டம் - பா.ஜ.க. மீது தி.மு.க. பாய்ச்சல்
    X

    காேப்புபடம்

    கீழ்பவானி கான்கிரீட் திட்டம் - பா.ஜ.க. மீது தி.மு.க. பாய்ச்சல்

    • 2012ம் வருடம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கான்கிரீட் போடுவதற்கு ஒரு முயற்சியை எடுத்தார்.
    • 95 சதவீத ஆயக்கட்டு விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

    காங்கயம் :

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தில் குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது போல் உள்ளது பா.ஜ.க. நிலைபாடு என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க. சுற்று சூழல் அணி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இது குறித்து தி.மு.க. சுற்று சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தின் மேற்கு மண்டலமான கொங்குப் பகுதியானது முழுக்க முழுக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் மலை மறைவுப் பிரதேசம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

    பவானி, நொய்யல், அமராவதி, காவிரி போன்ற ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வந்து இந்த கொங்குப் பகுதியை பசுமையாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தி 2600 வருடங்களுக்கு முன்பே கொடுமணல் நாகரிகத்தையும் உருவாக்கி இருக்கிறது என்பதை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    அப்படி இருந்த மழை மறைவு பிரதேசத்திலே 1940 முதல் 1950களில் ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முயற்சியாலும், அப்போதைய தமிழக முதலமைச்சர் முயற்சியாலும் பவானி சாகர் திட்டத்தை அன்றைய காங்கிரஸ் அரசு அமல் படுத்தியது. அந்தத் திட்டத்தின் கீழ் இன்றைய ஈரோடு, திருப்பூர்,கரூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 2,07,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த திட்டத்தை 2012ம் வருடம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கான்கிரீட் போடுவதற்கு ஒரு முயற்சியை எடுத்தார். அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம் முயற்சி எடுத்த பொழுது மிகப்பெரிய மக்கள் போராட்டமாக மாறி, ஜெயலலிதா மக்களுக்கு எதிரான இந்தத் திட்டத்தை ரத்து செய்தார். பின்னர் உங்கள் கூட்டணிக் கட்சியான அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மறுபடியும் இந்த திட்டத்தை 2020ம் ஆண்டு அரசாணை வழங்கி துவக்கி வைத்தார்.

    பிரதமர் நரேந்திரமோடி கோவையில் கீழ் பவானி திட்டத்தை துவக்கி விட்டு, இந்த திட்டம் மிகவும் அருமையான திட்டமென்றும், இந்த திட்டம் மேற்கு மண்டலத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பலவித நன்மைகளைக் கொண்டு வருமென்று கூறி விட்டு சென்று விட்டார். இந்த திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வரும் விவசாயிகள், இந்த திட்டத்தை எந்தக்கட்சி கொண்டு வந்தாலும் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என்று எதிர்த்து வந்தனர்.

    மேலும் குறிப்பாக கீழ் பவானி ஆயக்காட்டை சேர்ந்த விவசாயிகள் இதை எதிர்த்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியப்படுத்துவதில் நான் கடமைப் பட்டிருக்கிறேன். 2021ம் வருடம் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்கள் தலைவர், அன்றைய எதிர்க் கட்சித் தலைவர், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வாகனத்தில் தாராபுரத்திலிருந்து திருப்பூர் செல்லும் போது இந்தத்திட்டத்தைப் பற்றி எடுத்துக் கூறி இதைக் கைவிட வேண்டும். இது விவசாயிகளுக்கு எதிரான திட்டம் என்று விவசாயிகள் நிலையை பகிர்ந்தேன்.

    இந்தத் தவறை அ.தி.மு.க. அரசு செய்துள்ளது. நாம் இந்த திட்டத்தைக் கை விட வேண்டும் என்று பேசும் பொழுது, தலைவர் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு நிச்சயமாக விவசாயிகளிடம் கருத்துக்களைக் கேட்டு அமல் படுத்துவோம் என்று உறுதியளித்தார். இந்த உறுதி மொழியினை தாராபுரத்திலும், மடத்துக்குளத்திலும் பேசிய காணொளியை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்த சூழலில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகளை அழைத்து கருத்துக்கணிப்பு நடத்தும் பொழுது தெளிவாக புரிந்து கொண்டார்கள்.

    95 சதவீத ஆயக்கட்டு விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள்.அதற்குக் காரணம் ஒன்று வாழ்வாதாரம். மற்றொன்று சுற்றுச்சூழல் பாதிப்பு. பல லட்சம் மரங்கள் வெட்ட வேண்டும் என்ற ஐயம் விவசாயிகளிடம் இருந்தது. அதற்கான சரியான தரவுகளுடன் எத்தனை லட்சம் மரங்கள் வெட்ட வேண்டும் என்பதற்கான அறிக்கையை நீர்வளத்துறை அதிகாரிகள் இன்று வரை கொடுக்கவில்லை. இந்த சூழலிலே பல முறை அமைச்சர் முத்துச்சாமி விவசாயிகளை அழைத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டு அந்தக் கருத்தினை அரசிற்கு எடுத்துச் சென்று பல்வேறு விஷயங்களைக் கலந்துரையாடலில் விவசாயிகளுக்காக நடத்திக் கொண்டிருந்தார்கள்.

    மேலும் கீழ் பவானி பாசன பாதுகாப்பு என்ற விவசாய அமைப்பு பெருந்துறையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் ஒரு மிகப்பெரிய மாநாட்டை நடத்தியது. இந்தச் சூழலில் திடீரென்று உங்கள் கட்சியினைச் சார்ந்தவர்கள் அறிக்கை விடுகிறார்கள். ஏதோ திராவிட முன்னேற்றக் கழகம் இந்த திட்டத்தைக் கொண்டு வந்ததாகவும், இந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டும் இருக்கிறீர்கள். இந்தத் திட்டத்தை அமல்படுத்தியது நீங்கள் கூட்டணியிலிருந்த அ.தி.மு.க. ஆட்சிதான்.

    இந்தத் திட்டத்தைத் துவக்கி வைத்தது பிரதமர். இந்தச் சூழலில் இந்தத் திட்டத்தை நீங்கள் எதிர்க்கிறதை விட ஒரு மிகப் பெரிய வேடிக்கை எதுவுமே கிடையாது. அப்படி எதிர்க்க வேண்டும் என்றால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது. ஆம் நாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டோம் எங்கள் பிரதமர் இந்தத் திட்டத்தைத் துவக்கி வைத்தது மிகப்பெரிய தவறு தான் எங்களை மன்னித்து விடுங்கள் தமிழ்நாட்டு மக்களே. குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களே என்று கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் கொண்டு வந்த இந்தத் திட்டத்தை நீங்களே எதிர்ப்பது கோமாளித்தனமாக உள்ளது.

    எங்கள் ஊரில் சொலவடை ஒன்று சொல்வார்கள். குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது என்று. அது போலத் தான் இருக்கிறது நீங்களும் உங்கள் கட்சியினரும் செய்யும் விஷயங்கள். இனியாவது இதை எல்லாம் செய்வதை விட்டு விட்டு சாமானிய மக்களுக்கான அரசியலைக் கையில் எடுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×