என் மலர்
உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரத போராட்டம் 15-வது நாளாக தொடருகிறது:
- தேயிலை விவசாயிகள் போராட்டத்துக்கு வியாபாரிகள் அதரவு
- கோத்தகிரி மசூதியில் நாளை சிறப்பு தொழுகை நடத்துவது என நிர்வாகிகள் முடிவு
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச விலையாக ஒரு கிலோ ரூ.33.75 வழங்க வேண்டும், தேயிலை வாரி யம் உடனடியாக 30-ஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்குபெட்டா படுகர் நலசங்கம் சார்பில் 15-வது நாளாக தொடர் உண்ணா விரதப் போராட்டம் நடந்து வருகிறது. முன்னதாக 14-வது நாள் போராட்டத்திற்கு பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாக ராஜன் தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத் தில் கக்குளா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இது போல ஊட்டி பகுதியிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தேயிலை விவசாயிகளின் உண்ணா விரத போராட்டத்திற்கு கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கட்ட பெட்டு, கீழ்கோத்தகிரி, அர வேணு பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் நேரடியாக உண்ணாவிரத பந்தலுக்கு வந்திருந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் தேயிலை விவசாயிகளின் தொடர் உண்ணாவிரத போராட்டம் வெற்றிபெற வேண்டியும், தேயிலைக்கு விலை வேண்டியும் கோத்தகிரி மசூதியில் நாளை சிறப்பு தொழுகை நடத்துவது என முடிவு செய்து உள்ளனர். முன்னதாக அவர்கள் விவசாயிகளின் உண்ணாவி ரத பந்தலுக்கு நேரடியாக வந்திருந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.






