search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே கைது செய்யப்பட்ட போலி டாக்டரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்
    X

    தனியார் ஸ்கேன் மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகளை படத்தில் காணலாம்.

    கள்ளக்குறிச்சி அருகே கைது செய்யப்பட்ட போலி டாக்டரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்

    பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே இந்திலி மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வருவதாக சென்னை பாலின தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பாலின தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழு துணை சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் இந்திலி பகுதியில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் முருகேசன் (வயது 43) பி.பார்ம் படித்துவிட்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் சோதனை செய்த போது கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என ஸ்கேன் கருவி மூலம் பரிசோதனை செய்ததும், பெண் சிசுவாக இருந்தால் கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது.இதனையடுத்து அவருடைய வீட்டில் இருந்த 2 சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கேன் கருவி, கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கருக்கலைப்பு மையத்தை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து சின்னசேலம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் குறளியன் கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், முருகேசனுக்கு உதவியாளராக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சின்னராஜ் (28) என்பவரையும் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண் குழந்தைகள் வேண்டாம் என்று நினைக்கும் பெற்றோர்கள் கருவிலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என கண்டறிந்து சட்டவிரோதமாக செயல்படும் மையங்களில் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர்.

    கருக்கலைப்பு செய்வதால் பாலின விகிதம் குறையும் நிலை உள்ளது. எனவே பாலின சமத்துவத்தை உணர்ந்து ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளும் சாதிக்கலாம் என்பதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. இவ்வாறு அவர் கூறினார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக நல மருத்துவத்துறை தலைவர் (பொறுப்பு) பொன்னரசு கூறுகையில்,இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்து வருகின்றனர். சட்ட விரோதமாக நடைபெறும் கருக்கலைப்பு மையங்களில் 90 சதவீதம் பேர் பெண் சிசுக்கலையும், சுமார் 10 சதவீதம் முறையற்ற உடல் உறவினால் உருவாகும் கருவினையும் கருக்கலைப்பு செய்கின்றனர். கருவில் வளரும் சிசுவிற்கு மருத்துவ ரீதியாக குறைபாடுகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளிலேயே கருக்கலைப்பு செய்யப்படும்.இவ்வாறு கருக்கலைப்பு செய்யப்படும் பெண்களுக்கு மனநல மருத்துவரால் மன ஆற்றுதல் சிகிச்சையும் வழங்கப்படும். இதனால் அவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் இது போன்று சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதன் மூலமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மருத்துவம் கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.

    கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மூத்த வக்கீல் செல்வநாயகம் கூறுகையில்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு காலங்களில் அதிக அளவில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த குற்றத்தில் கைது செய்யப்படும் நபர்கள் 10 தினங்களில் ஜாமீன் பெற்று வெளியே வந்து விடுகின்றனர். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பெண் பிள்ளைகளின் பிறப்பு சதவீதத்தை அதிகப்படுத்த முடியும் என்றும் இல்லையென்றால் அது சமூகத்தின் பெரிய சீர்கேட்டை ஏற்படுத்தும் என கூறினார்.சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்திய முருகேசன் மகள் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார் என்பதும், முருகேசன் இது போன்ற வழக்கில் 4-வது முறையாக கைது செய்யப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×