search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும்- கலெக்டரிடம் காங்கிரசார் மனு
    X

    நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மனு கொடுத்த சமத்துவ மக்கள் கட்சியினர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்க வேண்டும்- கலெக்டரிடம் காங்கிரசார் மனு

    • நெல்லை, தென்காசி மற்றும் தென் மாவட்ட மக்களின் முக்கியமான ஆன்மீக நிகழ்ச்சியாக ஆடி அமாவாசை இருந்து வருகிறது.
    • குடிபோதையில் வரும் நபர்கள் ரோட்டில் அவதூறான செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

    உள்ளூர் விடுமுறை

    நெல்லை, தென்காசி மற்றும் தென் மாவட்ட மக்களின் முக்கியமான ஆன்மீக நிகழ்ச்சியாக ஆடி அமாவாசை இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை நாளை மறுநாள் (புதன்கிழமை) வருகிறது. எனவே அந்த நாளில் தென் மாவட்ட மக்கள் வழிபாடு செய்வ தற்கும், குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கும் வாய்ப்பாக அன்றைய தினத்தை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

    மேலும் திருவிழா காலம் முடியும் வரை வழக்கம் போல் சொரிமுத்து அய்யனார் கோவிலில் தங்குவதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    சமத்துவ மக்கள்கட்சி

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மகளிர் அணி செயலாளர் லட்சுமி மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலானவை பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்களின் அருகிலும் செயல்பட்டு வருகிறது. இதனால் கடைகளில் மது அருந்திவிட்டு குடிபோதையில் வரும் நபர்கள் ஆபாசமாக ரோட்டில் சுற்றி திரிவதும், ஆபாச வார்த்தைகளால் பேசித் திரிவதும், அவதூறான செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக டவுன் நயினார்குளம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி செல்லும் நபர்கள் சாலையில் வைத்து பொதுமக்கள் பார்வையில் படும்படி மது அருந்தி விட்டு அந்த பாட்டில்களை நயினார்குளத்தில் வீசுகின்றனர்.

    ஒரு சிலர் போதையில் அந்த பாட்டில்களை சாலையில் போட்டு உடைக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. மேலும் அவர்கள் சாலையில் நடந்து செல்பவர்களை மிரட்டுவதும், ஆபாசமாக திட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுபோன்ற சம்பவங்கள் மேற்கொண்டு நடைபெறாமல் இருக்க பொது இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு இதில் கூறியிருந்தனர்.

    பாரதிய ஜனதா

    பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கொடுத்த மனுவில்,நெல்லை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தொலைபேசி எண் 0462-2576878 ஆகும். இந்த தொலைபேசி எண்ணானது கடந்த ஒரு மாதமாக செயல்பாட்டில் இல்லை. இதனால் பொதுமக்களும், நோயாளிகளும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலாத நிலை உள்ளது.

    எனவே உடனடியாக தொலைபேசியை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

    Next Story
    ×