என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் குறித்து முகாம் நடத்தப்படும்
- விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் குறித்த துண்டு பிரசுரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.
இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட 102 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-
தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களின் கையேடு மற்றும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் குறித்த துண்டு பிரசுரம் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
நீலகிரியில் மூலிகை செடி பயிா் செய்யும் விவசா–யிகளுக்கு முறையான திட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு பரிந்துரையாக அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல, விதை கிழங்கு வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு தோட்டக்கலை பண்ணைகளான நஞ்சநாடு மற்றும் கோல்கிரைனில் விதை கிழங்குகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் வழங்கப்படும்.
தோட்டக்கலைத் துறை சாா்பில் உழவா் கடன் அட்டை, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் குறித்து முகாம்கள் நடத்தப்படும். கூடலூா் உழவா் சந்தையில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இட வசதி உள்ளதால், அதனை விரிவுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை மூலம் வழங்கப்படும் உழவா் கடன் அட்டை தொடா்பான கோரிக்கைகளுக்கு தனியாக கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் வாஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.






