search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
    X

    கல்லணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

    • கல்லணையில் இருந்து பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் பிரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதத்தில் அணை திறக்கப்பட்டது. அதாவது கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் கல்லணையை 27-ந்தேதி வந்தடைந்ததையடுத்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் பிரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஆனால், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கல்லணை கால்வாயில் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு பாலப்பணிகள் நடைபெற்றதால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 12 நாட்கள் ஆகியும், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் நாற்று கூட விடாமல் தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

    இந்தநிலையில் கல்லணை திறக்கப்பட்டு 9 நாட்களுக்குப்பிறகு நேற்று கல்லணை கால்வயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையிலிருந்து கல்லணை கால்வாயில் நேற்று காலை முதல் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பின்னர், மாலையில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 250 கன அடி வீதமாக உயர்த்தப்பட்டது. உயர்த்தப்படும் மேலும் கல்லணைக் கால்வாயில் விடப்படும் தண்ணீர் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என நீர் வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×