search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவை சாகுபடி ஆயத்த பணிகள் ஆய்வு கூட்டம்
    X

    சாகுபடி ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

    குறுவை சாகுபடி ஆயத்த பணிகள் ஆய்வு கூட்டம்

    • இயல்பாக 3.230லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4964 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாருவதற்கான 683 பணிகள் விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
    • நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும்

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பி ல்மகேஷ்பொய்யாமொழி, சக்கரபாணி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் இயல்பாக 3.230லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4964 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாருவதற்கான 683 பணிகள் விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    சுதந்திரத்திற்கு பிறகு முதன் முறையாக இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே 24-ந் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டை விட குறுவையில் 5.2 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளும் முன்கூட்டியே தொடங்கப்படுவதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்காமல் காக்கப்படும். மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயர்வதால் மாற்று பயிர் வகைகளும் அதிக அளவில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

    வேளாண் பெருமக்களின் நலன் கருதி இந்த ஆண்டும் ரூ.61 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 3 லட்சம் உழவர்கள் பயன்பெறுவர். வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.47 கோடி ஒதுக்கீடு மானிய விலையில் வழங்கப்படும்.

    வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 2400 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ.4 கோடியே 20 லட்சம் வழங்கப்படும். வேளாண் பொறியியல் துறை மூலம் உள்ளிட்ட 237 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ. 6 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். இதன் மூலமாக கடந்த ஆண்டு சாதனை அளவை விட இந்த ஆண்டும் அதிக பரப்பளவில் சாதனை எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு குறுவைப் பருவத்தில் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு குறுவை சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால நெல் இரக விதைகள், இரசாயன உரங்கள் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்து நெல் நடவு எந்திரங்களை கொண்டு விரைவாக நடவு பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்கு 7060 மெட்ரிக் டன் நெல் விதைகள் தேவைப்படுகிறது. இதுவரை 3547 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகிக்கப்பட்டு உள்ளது. பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தில் கடைமடை பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

    விதை, உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யாமல் அரசு டெப்போக்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடுதுறை 37, ஏஎஸ்டி 16 ஆகிய நெல் ரகங்கள் அதிக மகசூலை தரக்கூடியது இந்த ரக விதைகள் அதிகளவில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பயிர் கடன் வழங்கி சாகுபடி பணியை தொடங்க கூட்டுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கடன் பெற ஏதுவாக வருவாய் துறையினரால் வழங்கப்படும் அடங்கல் சான்றிதழ்களை உரிய காலத்தில் வழங்கி விவசாயிகளுக்கு வருவாய் துறையினர் உதவி புரிந்திட வேண்டும். தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேங்காயை மூலப் பொருளாகக் கொண்டு பட்டுக்கோட்டை பகுதியில் தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும்.

    பயிர் காப்பீடு திட்டத்தில் மாநில அரசு தனது பங்களிப்பை அதிகம் செலுத்துகிறது. எனது பிற மாநிலங்களைப் போல் பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். 35 சதவீதம் இடுபொருட்களின் விலையேற்றம் அதிகரித்துள்ளதால் அதற்கு ஏற்றவகையில் உற்பத்திப் பொருளுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    இனி வரும் காலங்களில் தூர்வாரும் பணியை மார்ச் மாதங்களிலேயே தொடங்கிட வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், எம்.பி.க்கள் எஸ். எஸ். பழனிமாணிக்கம், ராமலிங்கம், எஸ். கல்யாணசுந்தரம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன், எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, அசோக்குமார்,பூண்டி கலைவாணன், பன்னீர்செ ல்வம், அண்ணாதுரை, மேயர்கள் சண்.ராமநாதன், சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

    Next Story
    ×